
மேற்கு டெல்லியில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக இருந்துவந்த ஷம்பு தயாள் என்பவரை திருடன் ஒருவன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும்போது கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ஷம்பு தயாள், டெல்லியில் போலீசில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மாயாபுரி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவரின் செல்போனை பறித்து சென்றது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையின் அடிப்படையில் அனிஷ் என்பவர்தான் இதைச் செய்துள்ளார் என்பதை தெரிந்துகொண்டு போலீசார் அவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில், உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் ஷம்பு தயாள், அனிஷை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வழியில் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென திருடன் அனிஷ் தனக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீஸ்காரரை சரமாரியாக தாக்கியுள்ளான். இதில் கழுத்து, வயிறு, முதுகு பகுதி என பல இடங்களில் கத்தி குத்து விழுந்தது.
கத்தி குத்திற்கு இடையே ஷம்பு தயாளும் அந்த திருடனுடன் போராடியுள்ளார். அந்த சமயம் அங்கு கூடியிருந்த பொதுமக்களும் எந்தவித தடுப்பு முயற்சியிலும் ஈடுபடவில்லை. பட்டப்பகலில் பொதுமக்கள் முன்பு இந்த கத்தி குத்து சம்பவம் நிகழ்ந்தது.
இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக அங்கு வந்து திருடன் அனிஷை மடக்கி பிடித்தனர். உடம்பெல்லாம் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஷம்பு தயாளை ஆஸ்பத்திரியில் உடனடியாக சேர்த்தனர். இருந்தும் சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். இது சம்பந்தமான வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
இதையடுத்து, மூத்த போலீஸ் அதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள்.
இந்நிலையில், பட்டப்பகலில் பொதுவெளியில், போலீஸ்காரரை திருடன் கத்தியால் குத்தி கொன்ற இச்சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.