நியூஸிலாந்தில் கழுத்தளவு நீரில் பயணிகளுடன் சீறிப்பாய்ந்த பஸ்!

நியூஸிலாந்தில் கழுத்தளவு நீரில் பயணிகளுடன் சீறிப்பாய்ந்த பஸ்!

நியூஸிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஆக்லாந்து நகரில் சமீபத்தில் வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால் அந்நகரமே வெள்ளநீரில் மூழ்கியது.

கோடை காலம் முழுவதும் பெய்யும் மழையில் 75 சதவீதம் மழை 15 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது.

இதனால் சாலைகள் வெள்ளக்காடானது, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின, தண்ணீர் புகுந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது. மரங்கள் கீழே சாய்ந்தன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின்சாரம் தடைபட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்பட்டதால் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

ஒருபுறம் வெள்ளநீரை அப்புறப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்ற அதே நேரத்தில் சேத்ததின் மதிப்பையும் அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒரு பேருந்து கழுத்தளவு நீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் விடியோ வைரலாகி வெளியாகியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

டெப்பி பர்ரோஸ் என்ற பெண் இந்த விடியோவை பகிர்ந்துள்ளார். இவர் ஆக்லாந்தில் 21 உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றின் துணைத்தலைவராக உள்ளார். அவரது விடியோவில் கார் ஒன்று நீரில் மூழ்கி, அதன் மேற்கூரை மட்டுமே வெளியில் தெரிகிறது. அடுத்து வரும் விடியோவில் ஒரு பஸ் கழுத்தளவு நீரை கிழித்துக் கொண்டு எளிதில் செல்கிறது. அதில் பயணிகள் நின்றுகொண்டு செல்வதும் தெளிவாகத் தெரிகிறது. “வெள்ளநீரில் பயணிகளுடன் ஒரு பஸ் செல்வதை என்னால் நம்பமுடியவில்லை. இது வேடிக்கையாக இருக்கிறது” என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடியோவை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கழுத்தளவு தண்ணீரில் வண்டியை ஓட்ட டிரைவரால் எப்படி முடிந்தது? என்று பலரும் வியப்புடன் கேள்வி எழுப்பினர். டிரைவரின் சாமர்த்தியம் வியப்பளிக்கிறது என்று சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். நிதானமாக, ஓரே அளவான வேகத்தில், எந்த சிக்கலும் இல்லாமல் வெள்ளநீரை கடந்து சென்ற அந்த பஸ் டிரைவரை பாராட்டத்தான் வேண்டும் என்று சிலர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

“டிரைவரின் லைசென்ஸை பறிமுதல் செய்ய வேண்டும். தொழில் விதிமுறைகளை மீறி பஸ்ஸை வெள்ளத்தில் ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் பஸ்ஸுக்கு ஏற்படும் சேத்த்துக்கு அவரையே பொறுப்பாக்க வேண்டும்.” என்று ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

டெய்ல்பீஸ்: அன்றைய தினம் எல்டன் ஜான் என்பவரின் இசைநிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்காக 40,000-த்தும் மேற்பட்ட ரசிகர்கள் அரங்கில் குவிந்திருந்தனர். இசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே பேய்மழை பெய்யத் தொடங்கியதை அடுத்து நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டது. நிகழ்ச்சியா காணவந்த ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பியதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com