பணி செய்ய விடாமல் தடுத்ததாக சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு!

பணி செய்ய விடாமல் தடுத்ததாக சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற ஆனி திருமஞ்சன விழாவை ஒட்டி, ‘நான்கு நாட்களுக்கு பக்தர்கள் யாருக்கும் கோயிலின் கனக சபையின் மீது ஏறி சாமியை தரிசனம் செய்ய அனுமதி இல்லை’ என அந்தக் கோயில் தீட்சிதர்கள் சார்பில் அறிவிப்புப் பதாகை ஒன்று வைக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் புகார் செய்யப்பட்டது.

இதனை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், கோயிலுக்கு வந்து பிரச்னைக்குரிய அந்தப் பதாகையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்குக் கோயிலின் தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அந்தப் பதாகையை அகற்றாமல் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில் இன்று, போலீசார் உடன் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலுக்கு வந்து ‘சிதம்பரம் கோயில் கனக சபையில் மீது நின்று பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய அனுமதி இல்லை’ என தீட்சிதர்கள் வைத்த பதாகையை அகற்றி உள்ளனர்.

அந்தப் பதாகையை அகற்ற கோயில் தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை செயல் அலுவலர் சரண்யா அளித்த புகாரின் அடிப்படையில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com