7 சிறுவர்களை ஒரே வாகனத்தில் ஏற்றிச் சென்ற நபர் மீது கொலை முயற்சி வழக்கு.

7 சிறுவர்களை ஒரே வாகனத்தில் ஏற்றிச் சென்ற நபர் மீது கொலை முயற்சி வழக்கு.
Published on

மும்பையில் ஒரு இருசக்கர வாகனத்தில் ஏழு சிறுவர்களை ஏற்றிச்சென்ற இளைஞர் மீது உச்சபட்ச நடவடிக்கையாக கொலை முயற்சி வழக்கு போடப்பட்டுள்ளது. 

ஒரு வாகன ஓட்டிக்கு எதிராக இப்படி ஒரு அதிகபட்ச நடவடிக்கையை எடுத்துள்ளதாக இதற்கு முன்னர் நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் மும்பை நகர காவல்துறை ஓர் இளைஞர் மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மும்பையில் இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் ஒரே நேரத்தில் ஏழு சிறுவர்களை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றிருக்கிறார். இதை மிகப்பெரிய குற்றமாக எண்ணி, மும்பை நகர போக்குவரத்து காவல்துறையானது வாகனத்தை இயக்கிய நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இருக்கிறது.

மேலும் அந்த வாகனத்தை கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல், அந்த நபரையும் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர். இந்தியாவில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் மட்டுமே செல்வதற்கு அனுமதி இருக்கிறது. அந்த வாகனத்தில் செல்லும் இருவருமே ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த ஒரு நபர் சிறுவர்களை தனது வாகனத்தில் ஏற்றி ஸ்டண்ட் செய்ய முயற்சித்திக்கிறார். ஆகையால் அந்த நபர் மீது மிகவும் கடுமையான பிரிவுகளின் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

இதுபோன்று ஒரே வாகனத்தில் பலர் செல்லும் சாகசத்தை ராணுவ வீரர்கள் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட ஸ்டண்டுகள் அனைத்துமே பலமுறை ஒத்திகை பார்க்கப்பட்ட பின்னரே மேற்கொள்ளப்படும். மேலும், இதை ராணுவ வீரர்கள் பொதுவெளியில் அல்லாமல் ஸ்டண்ட் செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட களத்தில் செய்வார்கள். எனவே அந்த செயல் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆனால், மும்பையில் இந்த இளைஞர் செய்த செயல் பொதுவெளியில் செய்யப்பட்டுள்ளது. பொதுவெளியில் இதுபோன்ற ஸ்டண்ட் செயல்களில் ஈடுபடும் போது, அதை இயக்குபவர்களுக்கு மட்டுமின்றி சுற்றி இருக்கும் நபர்களுக்கும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இம்மாதிரியான குற்ற செயல்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆனால் மிகவும் அரிதாகவே இத்தகைய நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்வார்கள். 

இந்த சம்பவத்தில் இப்படிப்பட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க காரணமாக இருப்பது, சிறுவர்களை ஸ்டண்ட்டில் ஈடுபடுத்தியதே ஆகும். இதை விளையாட்டாக செய்யப் போய் தற்போது அந்த இளைஞர் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டார். இது அனைத்திற்கும் ஒரு வீடியோ காரணமாக அமைந்துவிட்டது. 

ஆம், அந்த சாகசத்தை அவர் யாருக்கும் தெரியாமல் செய்திருந்தால் பிரச்சனை இல்லை. பொதுவெளியில் செய்ததால் யாரோ படம் பிடித்து சமூக வலைதளங்களில் போட்டுவிட்டார்கள்.  அந்த காணொளி அதிவேகமாக இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த இளைஞரின் ஆபத்தான சாகசத்திற்கு எதிராக பலர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

பலர் சிறுவர்களின் உயிருக்கு ஆபத்து அளிக்கும் வகையில் அந்த இளைஞர் நடந்து கொண்டதால் அவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி போலீசாருக்கு கோரிக்கை வைக்கின்றனர். அதன் பேரில் மும்பை காவல்துறையினர் IPC 308 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதில் ஒரு சிலர் அந்த இளைஞர் எந்த சாகசத்திலும் ஈடுபடவில்லை. அவர் சிறுவர்களை பள்ளிக்கு தான் அழைத்து சென்றார் எனக் கூறுகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக காணொளியில் இருக்கும் சிறுவர்களும் பள்ளிக்கூட பையை வைத்திருப்பதை பார்க்க முடிகிறது. பொதுப் போக்குவரத்து அந்த பகுதியில் இல்லாததே இதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

என்னதான் சிறுவர்களை பள்ளிக்கு அவர் அழைத்து சென்றிருந்தார் என்றாலும், ஆபத்தானது மற்றும் சட்டத்திற்கு புறம்பானது என்பதால் அந்த நபர் தற்போது சிறை தண்டனை அனுபவிக்க நேரிட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com