மின் இணைப்புடன் ஆதார் இணைக்கும்படி வற்புறுத்தக்கூடாது என்று உத்தரவிடக் கோரிய வழக்கு!

சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி !
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
Published on

மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக்கூடாது என்று உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்று அந்த வழக்கினை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 2811 மின் வாரிய அலுவலகங்களில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

EB
EB

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும் எனவும், வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்த பின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களை நடத்தும் அரசு, ஆதார் சட்டப்படி, ஆதார் எண்ணுக்கு பதில் பயன்படுத்தக் கூடிய வேறு ஆவணங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சட்டத்தில் எந்த விதிகளும் வழிவகை செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால் அதற்கு மாநில தொகுப்பு நிதியத்தில் இருந்து வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு சமூக நல திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதால் மின் கட்டண மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனு கடந்த முறை பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் போது வீட்டு உரிமையாளரின் ஆதாரை மட்டுமே இணைக்க முடியும் என்பதால், அரசின் மானியம் வாடகைதாரருக்கு கிடைக்காது எனவும், ஆதாரை இணைப்பது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், வாடகைதாரர்கள் மானியம் பெறும் விவகாரம் என்பது உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையிலான பிரச்னை எனவும், மீட்டர் அடிப்படையில் தான் ஆதார் இணைக்கப்படும் எனவும், அனைத்து ஒப்புதல்களையும் பெற்ற பிறகே ஆதார் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், எந்த ஒரு அடிப்படை ஆதாரஙகளும் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com