
ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிந்து நந்தா. ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பால் இவர், 1996ல் ‘கோயிலி’ படத்தின் மூலம் ஒடியா திரையுலகில் அறிமுகமாகி, இதுவரைக்கும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 'ராங் நம்பர்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதையும் பெற்றார்.
இந்நிலையில், சமீபத்தில் இவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு டெல்லியில் உள்ள Liver and Biliary Sciences நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கல்லீரல் தானம் கிடைத்தால் பிந்து நந்தா உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் கூறியதை தொடர்ந்து, அவரது குடும்ப நண்பர் ஒருவர் கல்லீரல் தானம் கொடுக்க முன்வந்தார்.
அதைத் தொடர்ந்து, நடிகர் பிந்து நந்தா ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு உறுப்பு தான அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
ஆனால், அறுவை சிகிச்சைக்குப்பின் ICU-வில் மருத்துவ கண்காணிப்பில் இருந்தபோது, பிந்து நந்தாவிற்கு ரத்த அலர்ஜி உள்ளிட்ட சில பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிந்து நந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.