அவதூறு வழக்கில் பிரபல சினிமா தம்பதிக்கு ஒரு ஆண்டு சிறை!

அவதூறு வழக்கில் பிரபல சினிமா தம்பதிக்கு ஒரு ஆண்டு சிறை!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்பவர் டாக்டர் ராஜசேகர். இவர் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார். இவரது மனைவி ஜீவிதா. இவரும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சினிமா தம்பதி ஆவர். தற்போதும் சினிமாவில் நடித்துவரும் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் சிரஞ்சீவி தாம் நடத்திவரும் ஒரு அறக்கட்டளை மூலம் ஏழை எளியோருக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அப்படி நடிகர் சிரஞ்சீவி நடத்திவரும் ரத்த வங்கிக்குத் தானமாக பெறப்படும் ரத்தம், வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக ராஜசேகரும் அவரது மனைவி ஜீவிதாவும் கடந்த 2011ம் ஆண்டு குற்றம் சாட்டி இருந்தனர். அதையடுத்து, நடிகர் சிரஞ்சீவியின் உறவினரும் தயாரிப்பாளாருமான அல்லு அரவிந்த், சிரஞ்சீவி அறக்கட்டளை மற்றும் அவர் பெயரில் நடைபெற்று வரும் ரத்த வங்கி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ராஜசேகர் கூறியதாக, ஹைதராபாத் நாம்பள்ளி 17வது கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

ஏறக்குறைய 12 வருடங்கள் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் சுபா வழங்கிய தீர்ப்பில், சிரஞ்சீவியின் அறக்கட்டளை குறித்துத் தவறாகப் பேசியது நிரூபணமாகி உள்ளதால் ராஜசேகர் - ஜீவிதா தம்பதிக்கு 5000 ரூபாய் அபராதம் மற்றும் ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் ராஜசேகர் - ஜீவிதா தம்பதி மேல் முறையீடு செய்யவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து ராஜசேகர் - ஜீவிதா தம்பதி நீதிமன்றத்தில் அபராதத் தொகையை கட்டியதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அவதூறு வழக்கு விவகாரம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com