சென்னை மயிலாப்பூரில் நான்கு அடுக்கு மெட்ரோ சுரங்க ரயில் நிலையம்!

சென்னை மயிலாப்பூரில் நான்கு அடுக்கு மெட்ரோ சுரங்க ரயில் நிலையம்!

லைநகர் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் மக்கள் தொகையாலும் வாகனப் பெருக்கத்தாலும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு வருகிறது. இதை சீர்செய்யும் வகையில் அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மெட்ரோ ரயில்களின் சேவை மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், ஏற்கெனவே, சென்னை சென்ட்ரல் – எழும்பூர் – கோயம்பேடு – விமான நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, தற்போது சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 61,841 கோடி ரூபாயில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்று வருகிறது.

அதன்படி, மாதவரத்திலிருந்து சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கும், சென்னை கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவுக்கும் என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக சென்னையின் பல்வேறு சாலைகளிலும் ராட்சத இயந்திரங்களை கொண்டு இரவு பகலாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது. அந்த வகையில் 40க்கு மேற்பட்ட இடங்களில் சுரங்கப்பாதை மற்றும் உயர்த்தப்பட்ட ரயில் பாதைகளாகவும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, நாட்டிலேயே முதன்முறையாக சென்னை மயிலாப்பூரில் தரையில் இருந்து 115 அடி ஆழத்தில் நான்கு அடுக்குகளாக மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த ரயில் நிலையம் மூன்று நடை மேடைகளுடன் அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, ‘மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம் மூன்றாவது மற்றும் நான்காவது வழித்தடத்துக்கான பரிமாற்ற நிலையமாக இருக்கும். இந்த ரயில் நிலையம் பொதுத்தளம், வணிக அலுவலகம், மேல் நடை மேடை, கீழ் நடை மேடை என மொத்தம் நான்கு நிலைகளுடன் தரைக்கு கீழே 115 அடி ஆழத்தில் (35 மீட்டர்) நடைமேடை அமைய இருக்கிறது. இந்தப் பணி பெரும் சவாலாகத்தான் இருக்கும். மயிலாப்பூரை பொறுத்தவரை மிகவும் நெரிசல் மிகுந்த இடமாக உள்ளது. அதோடு, இங்கு போதிய நிலமோ, அகலச் சாலைகளோ இல்லை. இதனால் பூமிக்கடியில்தான் ஆழமான ரயில் நிலையமாகக் கட்ட வேண்டி உள்ளது. இந்த மெட்ரோ ரயில் திறக்கப்படும்போது, அது பயணிகளை பெரிதும் பிரம்மிப்பில் ஆழ்த்தும்படி இருக்கும்’ என்று கூறி இருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com