ரயில் தண்டவாளத்தை ஆட்டைய போட்ட திருட்டு கும்பல்!

ரயில் தண்டவாளத்தை ஆட்டைய போட்ட திருட்டு கும்பல்!
Published on

ரு சினிமா படத்தில் நடிகர் வடிவேலு, ‘என்னோட கிணத்தைக் காணோம்’ என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பார். அதுபோல்தான் சிரிக்க வேண்டி உள்ளது இந்த செய்தியையும் படித்து. ஆமாங்க… பீகார் மாநிலத்தில் இரண்டு கி.மீ. தொலைவுக்கு ரயில்வேவுக்கு சொந்தமான தண்டவாளத்தை யாரே திருடிக்கிட்டுப் போயிட்டாங்களாம்.

பொதுவாக, ரயிலில் திருடு போய்விட்டதான சம்பவங்களைத்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ரயில் ஓட வேண்டிய தண்டவாளத்தையே திருடிக் கொண்டு போய்விட்டார்கள் என்றால் என்னத்தைச் சொல்வது? பீகார் மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு கர்காரா என்ற இடத்தில் பழுது அடைந்து நின்ற ரயிலின் இன்ஜினை ஒரு திருட்டு கும்பல் திருடி அதனை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து பழைய இரும்பக் கடையில் போட்டு காசு பார்த்துவிட்டார்கள்.

இந்த நிலையில் கடந்த வாரம் மற்றொரு பரபரப்பு சம்பவம் பீகாரிலேயே நடைபெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் சமஸ்டிபூர் ரயில்வே கோட்டத்தில் பந்தவூல் என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து லோஹாத் எனும் சர்க்கரை ஆலைக்கு ரயில்வே பாதை ஒன்று உள்ளது. இந்த சர்க்கரை ஆலை சில வருடங்களாக இயங்கவில்லை. அதனால் இந்தப் பாதையில் ரயில் போக்குவரத்தும் நின்றுபோய் இருந்தது.

இதை நோட்டம் விட்ட திருட்டுக் கும்பல் ஒன்று சுமார் இரண்டு கி.மீ. தொலைவுக்கு அமைந்த அந்த ரயில்வே தண்டவாளத்தை பெயர்த்தெடுத்து விற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த விஷயம் கடந்த மாதம் 24ம் தேதிதான் ரயில்வே நிர்வாகத்துக்கே தெரிய வந்ததாம். இந்தத் தகவலை அறிந்த ரயில்வே நிர்வாகம் இரண்டு பாதுகாப்பு ஊழியர்களை இடைக்கால பணி நீக்கம் செய்துள்ளதாம். மேலும், இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து துறை சார்ந்த விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாம்.

இந்த நூதன தண்டவாளத் திருட்டில் ரயில்வே ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் ரயில்வே துறைக்கு எழுந்துள்ளதால் அந்தக் கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த மாதிரி ரயில் இன்ஜின், ரயில் தண்டவாள திருட்டு மட்டும் கிடையாதுங்க, பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் ஒரு செல்போன் டவரையே பிரித்தெடுத்து திருடிச் சென்ற சம்பங்கள் கூட நடைபெற்று இருக்கிறதாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com