விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடலில் உள்ள நீரை வானிலிருந்து ராட்சத மேகங்கள் உறிஞ்சிய அரிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலம்பாறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.
சுமார் 5 கி.மீ. தூரம் வரை அவர்கள் கடலுக்குள் சென்றபோது, திடீரென வானம் இருண்டு இரவு போல மாறியது. இதையடுத்து மிகப்பெரிய ராட்சத மேகங்கள் வானிலிருந்து கிளம்பி, கடலுக்குள் விழுந்து, ஒரு பெரிய சுழலாக உருவெடுத்து, கடல் நீரை அப்படியே உறிஞ்சி குடித்துள்ளன.
இந்த விசித்திரக் காட்சியை அந்த மீனவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். சுமார் அரை மணிநேரம் கடல் நீரை உறிஞ்சிய மேகங்கள், பின்னர் கலைந்து சென்றுவிட்டன. இந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.