ஹரியானாவை சேர்ந்த சிறுமி ஒருவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஓடி விழிப்புணர்வு செய்திருக்கிறார்.
உலகம் முழுவதுமே பெண்கள் பாதுகாப்பிற்காக பல விழிப்புணர்வுகளும், போதனைகளும் செய்யப்பட்டுத்தான் வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் இந்த விழிப்புணர்வுகள் அதிகமாகவே கொடுக்கப்படுகின்றன. ஏனெனில் இங்கு பல நாடுகளிலிருந்தும் வருகின்றனர். இந்தியா மிகப்பெரிய நாடு என்பதால், ஏராளமான சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. இதனால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவையும் இந்திய கலாச்சாரங்களையும் பார்க்க விரும்புகின்றனர்.
அப்படி வரும் சுற்றுலா பயணிகள் உலகம் முழுக்க நமது நாட்டைப் பற்றி எழுதவும் பகிரவும் செய்கிறார்கள். ஆனால், அப்படி வருபவர்கள் இந்தியா, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு என்று விமர்சனம் செய்கிறார்கள்.
இதற்கு முன்னர் பல நாடுகளில் எடுக்கப்பட்ட இன்டர்வியூக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. அதாவது உலகத்திலேயே பாதுகாப்பில்லாத நாடு எது என்று ஒவ்வொரு நாட்டு மக்களிடமும் கேட்கப்படுகிறது. அதற்கு அவர்கள் நிறைய பேர் இந்தியா என்று கூறுகிறார்கள். இதுபோல பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இதனால், இந்தியா இப்படி ஒரு நாடா என்று உலக மக்கள் ஆச்சர்யப்பட்டனர். அதேபோல் வெளிநாட்டு பெண்கள் இந்தியாவிற்கு தனியாக வரவே அஞ்சுகின்றனர். இதனை சரிகட்டும் விதமாக, சமீபத்தில் ஒரு ஆஸ்திரேலியா பெண், "இந்தியா அனைவருக்குமே பாதுகாப்பானது " என்று வீடியோ பதிவிட்டார்.
இருப்பினும் இந்தியாவில் வழக்கமாக பெண்கள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வுகள் கொடுக்கப்பட்டுதான் வருகின்றன.
அந்தவகையில் தற்போது, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 15 வயதி சிறுமி ஒருவர் பெண்கள் பாதுகாப்பிற்காக விழிபுணர்வு கொடுக்கும் விதமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் ஓடியிருக்கிறார். அதாவது பிரதமர் நரேந்திர மோடி கூறியதுபோல் பெண்கள் பாதுகாப்பு வலியுறுத்தியும், பெண்களால் அனைத்தும் சாதிக்க முடியும் என்ற நோக்கத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அந்த சிறுமி ஓடியிருக்கிறார்.
பெங்களூர், சேலம், நாமக்கல் வழியாக வந்து இன்று கரூரை அடைந்தார். இது அவரின் 92வது நாளாகும். கிட்டதட்ட 120வது நாள் தனது பயணத்தை முடித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.