பெற்றோருக்குத் தெரியாமல் 52 லட்சம் செலவு செய்த சிறுமி.

பெற்றோருக்குத் தெரியாமல் 52 லட்சம் செலவு செய்த சிறுமி.

பெற்றோரின் வங்கிக் கணக்கிலிருந்து அவர்களுக்கே தெரியாமல் 52 லட்சத்தை செலவு செய்தது மட்டு மல்லாமல், பணம் எடுத்தது தொடர்பாக வரும் மெசேஜ்களையும் அவர்களுக்கே தெரியாமல் டெலிட் செய்து ஏமாற்றி இருக்கிறார் 13 வயது சிறுமி. 

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்களிடம் செல்போன் மோகம் அதிகரித்துக் காணப்படுகிறது. அவர்கள் ஸ்மார்ட்ஃபோனில் என்ன செய்கிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் கவனிப்பதில்லை. இவ்வாறு கவனிக்காமல் போனால் என்ன நடக்கும் என்பதை சீனாவில் ஒரு 13 வயது சிறுமி செய்த செயல் எடுத்துரைத்திருக்கிறது. 

முன்பெல்லாம் பெரியவர்கள் மட்டுமே ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது ஐந்து வயது குழந்தைகள் கூட ஸ்மார்ட்போன் கொடுக்கவில்லை என்றால் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் அளவிற்கு, அதன் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனால், வெளியே யாருடனும் பழகாமல் நாள் முழுவதும் செல்போனையே பயன்படுத்தும் நிலைக்கு பல சிறுவர்கள் தள்ளப்படுகிறார்கள். இதில் சிலர் மொபைல் கேம்களுக்கு அடிமையாகி சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். 

அந்த வகையில் சீனாவைச் சேர்ந்த 13 சிறுமி, செல்போன் கேம்களுக்கு அடிமையாக இருந்துள்ளார். சில கேம்களுக்கு பணம் செலுத்திதான் விளையாட முடியும் என்பதால், தனது தாயின் டெபிட் கார்டுகளை அவருக்கே தெரியாமல் பயன்படுத்தி விளையாடி வந்துள்ளார். எப்போதெல்லாம் கேம் விளையாட தாயின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கிறாரோ, அப்போதெல்லாம் தனது தாயின் செல்ஃபோனை தன்னிடமே இருக்கும்படி பார்த்துக் கொண்டுள்ளார். ஏனென்றால் பணம் எடுக்கும்போது வங்கியிலிருந்து தாயின் செல்போனுக்கு வரும் மெசேஜை அப்போதுதான் டெலிட் செய்ய முடியும். அதோடு பணம் எடுத்த விஷயத்தையும் தாய்க்குத் தெரியாமல் மறைத்து விடலாம். 

இப்படி பலமுறை பணத்தை எடுத்து கேம் விளையாடி வந்துள்ளார். அதே நேரம் பள்ளிக்கும் ஸ்மார்ட்போனைக் கொண்டு சென்று கேம் விளையாடுவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார். அப்போது இவருடன் பயிலும் சக மாணவிகளும் கேம் விளையாட கூட்டு சேர்ந்துள்ளனர். அப்போது அந்த சிறுமி தன் தாயின் பயணத்தை கேம் விளையாடப் பயன்படுத்துவது அவர்களுக்கு தெரிந்ததால், நாளடைவில் தங்கள் செல்போனில் கேம் விளையாடவும் பணம் செலுத்துமாறு அந்த சிறுமியை வற்புறுத்தியுள்ளனர். இல்லையேல் ஆசிரியர்களிடம் சொல்லிவிடுவோம் என பிளாக்மெயில் செய்துள்ளனர். அவர்களுக்கு பயந்து அந்த சிறுமியும் தன் தாயின் பணத்தை சக மாணவிகளுக்கும் செலவழித்திருக்கிறார். 

இப்படியே நான்கு மாதங்களுக்கு மேலாக இந்த செயல் தொடர்ந்துள்ளது. ஒரு நாள் வகுப்பறையில் கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த சிறுமியும் அவரோடு விளையாடிய சக மாணவிகளும் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டனர். பின்னர் இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து பள்ளிக்கு வரவழைத்து விசாரித்தபோது, பணம் செலுத்தி கேம் விளையாடுவதை ஒப்புக்கொண்டார். 

இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக தங்கள் வங்கிக்கணக்கை சரிபார்த்த போது, அதிலிருந்து 449,500 லட்சம் யுவான் செலவழிக்கப்பட்டது தெரியவந்தது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 52 லட்சமாகும். தற்போது அவர்களின் வங்கிக் கணக்கில் வெறும் 5  ரூபாய் மட்டுமே மிச்சம் இருக்கிறது. இந்நிலையில் என்ன செய்வதென தெரியாமல் அந்த குடும்பம் தவித்து வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக 10 ஆண்டுகளுக்கும் மேல் சேர்த்த மொத்தப் பணமும் பறிபோனதால் பெற்றோர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 

"இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிந்தால் கோபப் படுவார்கள் என்பதனால், வகுப்பில் உள்ள மாணவிகள் கேட்கும் போதெல்லாம் பணத்தை செலவழித்தேன். இல்லையெனில் அவர்கள் நாள் முழுவதும் என்னை ஆசிரியரிடம் சொல்லி விடுவேன் என மிரட்டுவார்கள்" என அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com