சத்தீஸ்கர் மாநிலம், கான்கேர் மாவட்டத்தில் உள்ளது கேர்கட்டா அணை. இந்த மாவட்டத்தில் உணவு அதிகாரியாகப் பணியாற்றுபவர் ராஜேஷ் விஷ்வாஸ். இவர் தனது குடும்பத்துடன் இந்த அணை அருகே பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார். அப்போது செல்பி எடுத்தபோது, அவரது செல்போன் அணையில் தவறி விழுந்து விட்டது. இந்த செல்போனின் மதிப்பு சுமார் ஒரு லட்ச ரூபாய் என்று சொல்லப்படுகிறது.
அணையில் விழுந்த போனை கண்டுபிடிக்க உள்ளூர்வாசிகளை அணையில் இறக்கித் தேடினார். ஆனாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அந்த அதிகாரி அணையின் மொத்த தண்ணீரையும் வெளியேற்ற இரண்டு பம்புகளைக் கொண்டு வந்து மூன்று நாட்கள் தொடர்ந்து இடைவிடாமல் மொத்த தண்ணீரையும் வெளியேற்றி இருக்கிறார். இதன் மூலம் 1500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் அளிக்கக்கூடிய 21 லட்சம் லிட்டர் தண்ணீரை அவர் வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் செய்த புகாரைத் தொடர்ந்து, நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்ததையடுத்து நீரை வெளியேற்றும் பணி நிறுத்தப்பட்டது.
அங்கு வந்த அதிகாரிகளிடம் ராஜேஷ் விஷ்வாஸ், ‘‘தனது செல்போனில் அரசுத் தகவல்கள் இருப்பதாகவும் அதற்காக எந்த விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்” என்றும் கூறி இருக்கிறார். அதைத் தொடர்ந்தும் அணை நீர் இறைக்கப்பட்டு இருக்கிறது. அதையடுத்து, அவரது செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், அந்தப் போன் வேலை செய்யவில்லை. இந்தச் சம்பவம் குறித்து பதிலளித்த மாநில அமைச்சர் அமரஜீத் பகத், இந்தச் சம்பவம் குறித்து தனக்குத் தெரியாது. ஆனாலும், உண்மையின் அடிப்படையில் அந்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.