
இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தின் மத்தியப் பகுதியில் மிகப் பிரம்மாண்டமான தங்கம் செரிந்துள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹுனான் மாகாண புவியியல் துறை அளித்த தகவலின்படி, பிங்சியாங் கவுண்டியில் புதிய தங்க இருப்பு அறியப்பட்டுள்ளது. புவியியல் நிபுணர்கள் 40க்கும் மேற்பட்ட தங்க தனிம பரவியுள்ள பகுதிகளை 6,561அடி ஆழத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்புக்குப் பிறகு, சீனாவில் உள்ள இந்த சுரங்கத்தின் முக்கிய பகுதியில் உள்ள மொத்த தங்க இருப்பு தற்போது 300.2 டன்களை எட்டியுள்ளது. மதிப்பிடப்பட்ட தரவுகளின்படி, இந்த சுரங்கத்தில் 1000 டன்களுக்கும் அதிகமான தங்கம் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கு கிட்டத்தட்ட 82.8 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் புதைந்துள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 6 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். இங்குள்ள சுரங்கத்தில் கிடைத்த ஒரு டன் தாதுவில் அதிகபட்சமாக 138 கிராம் தங்கம் கிடைக்கிறது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 10 லட்ச ரூபாய் ஆகும்.
தற்போது சீனா தான் உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக உள்ளது. 2024 ஆம் ஆண்டின் மத்தியில் சீனாவின் தங்கம் கையிருப்பு 2,264.32 டன்களாக இருந்தது. இது மற்ற நாடுகளை விட மிகவும் அதிகமாகும். உலக தங்க கவுன்சில் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய தங்க உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு மட்டும் 10% ஆகும். இந்த புதிய தங்கக் சுரங்கம் மேலும் சீனாவின் பங்களிப்பை அதிகரிக்க செய்யும்.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சீனாவின் பொருளாதாரம் பெருமளவில் சீர்குலைந்துள்ளது. சீனா சரிந்து வரும் தனது பொருளாதாரத்தை காப்பாற்ற பல முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அங்கு நிலத்தின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், ரியல் எஸ்டேட் துறையும் சரிவை சந்தித்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நிச்சயமற்ற நிலைகள், மந்தமான பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி சரிவை சந்தித்து வரும் சீனாவில் இந்த தங்க இருப்பு அதன் பொருளாதாரத்தை உயர்த்த உதவும்.
தற்போது சீனாவின் நிலை மாறத் தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களில் சீனா அதிக அளவில் தங்கத்தை வாங்கியுள்ளது. எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் தங்கம் மிக முக்கியமானது. ஒரு நாட்டில் எவ்வளவு தங்கம் இருக்கிறதோ, அவ்வளவு பொருளாதார சக்தி வாய்ந்தது. ஒரு நாடு தனது தங்க இருப்பின் மதிப்பை வைத்து தான் தனது பணத்தினை சரியான முறையில் அச்சிட முடியும். சீனாவில் காணப்படும் இந்த தங்க இருப்பு அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும். இக்கட்டான நேரத்தில் சீனாவிற்கு இந்த ஜாக்பாட் அடித்து, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.