ஜப்பானிலிருந்து ஒரு தம்பதி ஜெயிலர் திரைப்படம் பார்ப்பதற்காகவே சென்னை வந்துள்ளனர். இவர்கள் தொடர்பான செய்திகளும் காணொளிகளும் இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வசூல் மன்னனாக இருந்து வரும் தலைவரின் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் நேற்று ரிலீசானது. இதற்கு முன்பு நடித்த ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில், இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும் இத்திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமாருக்கு முந்தைய படமான பீஸ்ட் மோசமான விமர்சனத்தை பெற்றதால், இவருக்கும் ஜெயிலர் திரைப்படம் முக்கியமாகப் பார்க்கப்பட்டது.
நெல்சனை அனைவருமே தவறாக பேசி வந்த நிலையில், தொடக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் தொடர்பான பிரமோஷனும் பெரிய அளவில் இல்லை. ஆனால் திரைப்படத்தின் டிரைலர் வெளியானதும் எல்லாமே தலைகீழாய் மாறிப்போனது. மக்களுக்கு ஜெயிலர் திரைப்படம் மீதான நம்பிக்கை அதிகரித்தது. திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே எல்லா காட்சிகளும் ஹவுஸ் ஃபுல் ஆனது. அத்துடன் சில தனியார் நிறுவனங்களும் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆன நாளன்று விடுமுறை அளிப்பதாகவும் அறிவித்தனர். அந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் ஜெயிலர் திரைப்பட பேச்சுதான். இதற்கிடையே திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரஜினிக்கும் இயக்குனர் நெல்சனுக்கும் கம்பேக் திரைப்படமாகவே இது அமைந்துவிட்டது. அனைவருமே திரைப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் திரைப்படம் வெளியாவதால் இத்திரைப்படத்தை ரஜினி ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். பெரும்பாலானவர்களின் ரிவ்யூ பாசிட்டிவாக இருக்கும் நிலையில், வசூலில் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் ரசிகர் பட்டாளத்திற்கு எல்லையே இல்லை என்பது நாம் அனைவருக்குமே தெரியும். கடல் கடந்து உலகம் முழுவதும் மொழி, இனம், நாடு என அனைத்தையும் கடந்து அவரது ரசிகர்கள் இருக்கின்றனர். இவருக்கு ஜப்பான் நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தை பார்ப்பதற்காகவே ஜப்பானிலிருந்து ஒரு ஜோடி சென்னைக்கு பறந்து வந்துள்ளது. ஜப்பான் நாட்டிலும் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்றாலும், ரஜினியின் கோட்டையான தமிழகத்திற்கு வந்து படம் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்தத் தம்பதி சென்னை வந்துள்ளனர்.
இது தொடர்பான காணொளிகளும், புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாக ட்ரெண்டாகி வருகிறது. அந்தக் காணொளியில் "இங்கு நான் தான் கிங்.. நான் வைப்பது தான் ரூல்ஸ்.. ஹூக்கும்" என்று ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி பேசிய டயலாக்கையும் அவர்கள் அட்டகாசமாகப் பேசினர்.