திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அவ்வையார் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ். நகைக்கடை நடத்தி வரும் இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ், கொஞ்ச நகைகளை ஏழுமலையிடம் கொடுத்து அவற்றை லேசர் கட்டிங் செய்து வரும்படி சென்னைக்கு அனுப்பி வைத்தார். முப்பது சவரனுக்கு மேல் இருந்த அந்த நகைகளை லேசர் கட்டிங் செய்துவிட்டு மீண்டும் திருவண்ணாமலைக்குச் செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்திருக்கிறார் ஏழுமலை.
சிறிது நேரத்தில் திருவண்ணாமலைக்குச் செல்லும் பேருந்து வந்தபோது, அதில் இடம் பிடிப்பதற்காக ஏழுமலை, தங்க நகைகள் வைத்திருந்த பையை பஸ்ஸின் ஜன்னல் வழியாக இருக்கையில் போட்டிருக்கிறார். உடனே பேருந்தில் ஏறி வந்து பார்த்தபோது அவர் வைத்த சீட்டில் தங்க நகைகள் இருந்த பையைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஏழுமலை, பஸ்ஸின் பல பகுதிகளிலும் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால் நகை உரிமையாளர் விக்னேஷிடம் தகவல் சொல்லி உள்ளார்.
அதைத் தொடர்ந்து சென்னைக்கு வந்த விக்னேஷ், இது குறித்து கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பேருந்து நிலையத்தின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் நீண்ட நேரமாக ஏழுமலையை குறி வைத்துப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஆசாமி பஸ்ஸிலிருந்து நகை பையை எடுத்துக் கொண்டு பைக்கில் தப்பிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
அதையடுத்து, தப்பிச் சென்றவரின் பைக்கின் பதிவு எண்ணைக் கொண்டு அந்த நபர் குறித்த விவரங்களை சேகரித்த போலீசார், அவரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் சந்திரசேகர் என்பதும், அவர் நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 30.5 சவரன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். கொள்ளையடிக்கப் பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பின்னர் சந்திரசேகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.