
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 14ம் தேதி மகர விளக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதனைக் காண பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் சபரிமலையில் கட்டுக் கடங்காத கூட்டம் அலைமோதியது.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை நள்ளிரவு வரை சுமார் 46,000 பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் வந்தடைந்ததாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியாக காட்சியளித்த ஐயப்பனை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர்.
நாள்தோறும் ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது . இந்நிலையில், மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் மகர விளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசன நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்ரூ முடிவடைந்தது.
மகர விளக்கு விழா முடிந்த பின்பும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், வரும் 19ஆம் தேதி வரை சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் மகரவிளக்கு விழாவிற்கு பிறகும் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், சபரிமலையில் தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் வரும் 19 ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு வரும் 20 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் கோயில் நடை சாத்தப்பட உள்ளது