திருப்பதி மலைப்பாதையில் நடந்த சென்ற சிறுவனை தாக்கிய சிறுத்தை...

திருப்பதி மலைப்பாதையில் நடந்த சென்ற சிறுவனை தாக்கிய சிறுத்தை...

திருப்பதிக்கு மலைப்பாதையில் பாதயாத்திரையாக நடந்து சென்று பெருமாளை தரிசிக்கும் பக்தர்கள் அதிகம் உண்டு. வனப்பகுதி சூழ்ந்த நடைபாதையில் சிறுத்தை போன்ற விலங்குகளும் இருப்பதைஅனைவரும் அறிவர். இருந்தாலும் விலங்குகள் மனிதர்கள் வரும் பாதைக்கு வந்துசெல்வது மிகவும் அரிதாகவே இருக்கும் என்பதால் பக்தர்கள் பயமின்றி நடந்து சென்றனர். அனால் இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி எச்சரிக்கையும் தந்துள்ளது.

மலைப்பாதையில் பாதயாத்திரையாக பெற்றோருடன் சென்ற மூன்று வயது சிறுவனை சிறுத்தை தாக்கி தூக்கி சென்ற அதிர்ச்சி சம்பவம்தான் மக்களிடையே அச்சத்தை தந்துள்ளது .  

    திருமலை ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அலிபிரி எனும்  மலைப்பாதையில் பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து  செல்வது வழக்கம். ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் அதோனியை சேர்ந்த ஆறு பேர் கொண்ட குடும்பத்தினர் வியாழக்கிழமை இரவு மலைப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஏழாவது மைலில் ஆஞ்சநேயர் சுவாமி சன்னதியில் தாண்டி சிறிது தூரம் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது பெற்றோர்கள் வேகமாக முன்னால் சென்றுவிட மெதுவாக  தாத்தாவுடன் நடந்த சென்று கொண்டிருந்த கௌசிக் எனும் மூன்று வயது சிறுவன் அங்குள்ள கடையில் சிப்ஸ் வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தான். அச்சமயத்தில் வலது புறத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனைக கவ்விக்கொண்டு வனப்பகுதிக்குள் ஓடியது .

    இதைப் பார்த்த  உடன் வந்த  பக்தர்கள் மற்றும் சிறுவனின் தாத்தா அங்கிருந்த  காவல்துறையினர் சட்டம் போட்டதையடுத்து சிறுவனை தூக்கிச்சென்ற சிறுத்தை சுமார்  150 மீட்டர்  தூரத்தில் உள்ள வனப்பகுதியில் சிறுவனை விட்டுவிட்டு தப்பி ஓடியது. பின்னர் அப் பகுதியில் இருந்த பாதுகாப்பு ஊழியர் சிறுவனின் அழுகுரல் கேட்டு  அங்கு சென்று பார்த்த போது சிறுத்தை தாக்கியதில்  காயமடைந்த நிலையில் சிறுவன் மட்டும் இருந்தான். அவனை மீட்டுத் தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக திருப்பதியில் உள்ள பத்மாவதி இருதாலயா மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

     மருத்துவமனையில் செயல் அதிகாரி தர்மா ரெட்டி நேரில் பார்வையிட்டு நடந்த விபரங்களை கேட்டறிந்தார். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையுடன் கும்பலாக செல்லும்படி தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். சிறுத்தை மீண்டும் பக்தர்கள் மத்தியில் வராமல் இருக்க வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் திருமலையில் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது .

      சிறுத்தையால் தூக்கிச் செல்லப்பட்ட சிறுவன் உயர்தர சிகிச்சையில் அபாய கட்டத்தை  தாண்டி விட்டாலும் சிறுத்தை பயம் அந்த பாலகனின் மனதில் என்றும் வடுவாக தங்கும். திருப்பதி மட்டுமல்ல எந்த ஊராக இருந்தாலும் மலைப்பகுதியில் செல்லும்போது வனவிலங்குகளால் ஆபத்து வரும் என்பதை அறிந்து குழந்தைகளை தகுந்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்வது பெற்றோர்களின் கடமை. பெரும்பாலும் வனப்பகுதிக்குள் குழந்தைகளை அழைத்துச்செல்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com