வாழ்க்கையில் தோற்ற இடத்தில் சாதித்துக் காட்டுவது அவ்வளவு எளிதல்ல. அது மிகவும் சவாலானதாகும். இந்த சவாலை அமேசான் நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு சிங்கப்பெண் செய்து காட்டியுள்ளார். தன்னைப் பணியிலிருந்து நீக்கிய நிறுவனத்திலேயே உயர் பதவிக்குத் தேர்வாகி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
சில காலமாகவே தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் நிலை மோசமாக இருக்கிறது. பல நிறுவனங்களும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றி வருகின்றனர். இந்நிலையில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்த 'பேய்ஜ் சிப்ரியானி' என்ற பெண் ஊழியர், அந்நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பின்பும், தனது விடாமுயற்சியின் காரணமாக அதே நிறுவனத்தில் உயர் பதவியில் சேர்ந்துள்ளார்.
டெக் நிறுவனங்கள், பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஊழியர்களையே திடீரென வேலையை விட்டு நீக்கி விடுகின்றனர். குறிப்பாக ட்விட்டர், அமேசான், மெட்டா போன்ற பெரிய நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை நீக்கிவிட்டது. மேலும் பணிநீக்க நடவடிக்கைகள் தொடரும் என்றும் அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே 8000க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்த அமேசான், இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் மாதங்களில் கிட்டத்தட்ட 18,000க்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என தெரிவித்தது. அதன் அடிப்படையில் அவ்வப்போது ஊழியர்கள் அமேசான் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் வரிசையில் அமெரிக்காவிலுள்ள அமேசான் நிறுவனத்திலும் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது அந்நிறுவனத்தில் சோசியல் மீடியா மார்க்கெட்டிங் குழுவில் முக்கிய பொறுப்பு வகித்த 'பேய்ஜ் சிப்ரியானி' என்ற பெண்ணும் பணியை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அதன் பின்னர் அவர் வேறு நிறுவனங்களில் வேலை தேடத் தொடங்கினர். இப்படியே நான்கு மாதங்கள் கடந்து விட்டது. இந்நிலையில்தான், அவர் பணியாற்றிய அதே அமேசான் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு பேய்ஜ் சிப்ரியானி விண்ணப்பித்து, நேர்காணலில் சிறப்பாக செயல்பட்டு, அந்த பணியையும் தன்வசம் ஆக்கிக்கொண்டார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவர் முன்பு பணியாற்றிய வேலையை விட, சீனியர் ரோல் பணியில் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது,"நான் முன்பு எங்கு பணிநீக்கம் செய்யப்பட்டேனோ அதே இடத்தில் மீண்டும் உயர் பதவியில் பணிக்குச் சேர்ந்துள்ளேன். இதைத் தெரிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பணிக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன். இந்த புதிய பயணம் எனக்கு மிகுந்த எதிர்பார்ப்பைக் கொடுக்கிறது" என பதிவிட்டுள்ளார்.
தான் தோற்ற இடத்திலேயே சாதித்துக்காட்டிய இந்த சிங்கப்பெண்ணுக்கு, அனைவரும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.