சரயு நதிக்கரையில் மாலை வேளைகளில் நடைபெறும் ஆரத்தி மிகவும் பிரபலம். இதைக் கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இங்கு வருகை தருகின்றனர். ஸ்ரீராமர் இந்த உலக வாழ்வை முடித்துக்கொள்ள தீர்மானித்தபோது இந்த சரயு நதியில்தான் இறங்கினார் என்று நம்பப்படுகிறது. அயோத்தியில் ஓடும் இந்த சரயு நதியில் சுற்றுலாவை ஊக்குவிக்க, சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா படகு இல்லம் போன்ற சேவைகளைத் தொடங்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது.
இதுகுறித்து, உத்தர பிரதேச சுற்றுலாத்துறையின் இணை இயக்குநர் ஆர்.பி.யாதவ் கூறுகையில், “அயோத்தியின் சரயு நதியில் சுற்றுலாவை ஊக்குவிக்க சொகுசு கப்பல் மற்றும் படகு இல்லம் போன்ற சேவைகளைத் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக 11 கோடி ரூபாயில் சொகுசுக் கப்பல் வாங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சொகுசு கப்பலில் ஒரே நேரத்தில் 100 பேர் பயணம் செய்யலாம். கப்பலின் முதல் தளத்தில் அமைந்த திறந்தவெளியில் இருந்து சுற்றுலா பயணிகள் சரயு ஆற்றின் படித்துறைகளில் மாலை நேரத்தில் நடைபெறும் ஆரத்தியைக் கண்டு ரசிக்க முடியும். இதைப்போலவே, படகு இல்ல சேவைகளும் தொடங்கப்பட உள்ளன. இதற்கான படகுத்துறை அமைக்க நயா படித்துறையில் சவுத்தரி சரன் சிங் பூங்கா அருகே சுற்றுலாத்துறைக்கு இடம் வழங்கப்பட உள்ளது.
சரயு நதிக்ரையில் மிகப் பிரம்மாண்டமாக நிர்மாணிக்கப்பட்டு இருக்கும் அயோத்தி ஸ்ரீராமர் கோயில் திறக்கப்பட உள்ள நேரத்தில் இந்த சொகுசு கப்பல் மற்றும் படகு இல்ல சேவைகளைத் தொடங்கும் வகையில் பணிகள் விரைவுபடுத்த சொகுசு கப்பல் மற்றும் படகு இல்ல சேவை நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த சொகுசு கப்பல் மற்றும் படகு இல்ல சேவைகள் மூலம் தீபோத்ஸவம் நடைபெறும் நேரத்தில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் முடியும்.
முதற்கட்டமாக இரண்டு சொகுசு கப்பல் சேவை தொடங்கப்படும். அதன்படி முதல் கப்பல் வரும் அக்டோபர் மாதம் தயாராகி விடும். இந்த சொகுசு கப்பல்களுக்கு கனக் மற்றும் புஷ்பக் எனப் பெயரிடப்பட உள்ளது. நயா படித்துறை தவிர, குப்தர் படித்துறையிலும் ஒரு படகுத்துறை அமைக்கப்படும். இந்த இரண்டு சொகுசு கப்பல்களும் பகல் நேரத்தில் 9 கி.மீ. தொலைவுக்கு தங்களது பயண சேவைகளை அளிக்கும். இந்தக் கப்பல்கள் பேட்டரி மற்றும் சூரிய ஒளி சக்தியில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சொகுசு கப்பல் சேவைக்காக, ‘அலக்நந்தா க்ரூசேலைன்’ நிறுவனத்துடன் உத்தர பிரதேச அரசு ஒப்பந்தம் செய்து இருக்கிறது. இந்த நிறுவனம் வாரணாசியில் இதுபோன்ற சேவையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘அயோத்தியா க்ரூசேலைன்’ என்ற மற்றொரு நிறுவனத்துடனும் உத்தர பிரதேச அரசு ஒப்பந்தம் செய்ய இருக்கிறது. இரு கப்பல்களில் ஒரு கப்பல் குப்தர் படித்துறையிலும், மற்றொரு கப்பல் கேரளாவின் கொச்சியிலும் கட்டப்பட்டு வருகின்றன. இந்த இரட்டை அடுக்கு சொகுசு கப்பலில் டிஜிட்டல் திரைகள், செல்ஃபி பாய்ன்ட், விடுதிகள் உள்ளிட்ட நவீன வசதிகள் அமைக்கப்பட உள்ளது” என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.