2050-க்குள் பாதி உலகிற்கு பார்வை மங்கும்! உலகை அச்சுறுத்தும் "கிட்டப்பார்வை பெருந்தொற்று"..!

Red lines in eyes
Red lines in eyes
Updated on

"கிட்டப்பார்வைப் பெருந்தொற்று” குறித்து 2025 மற்றும் 26 காலகட்டத்தில் பல முக்கியமான ஆய்வுகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக 2025-ல் வெளியான ஒரு பெரிய பிந்தைய பகுப்பாய்வு (meta-analysis)  உலகளவில் மொபைல், கணினி போன்ற சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களில் கிட்டப்பார்வை வேகமாக அதிகரிப்பதாக எச்சரிக்கிறது.

மேலும் 2025-ல் வெளியான மற்றொரு பகுப்பாய்வில் குழந்தைகள் தினமும் கூடுதலாக 1 மணி நேரம் திரையை பயன்படுத்தினால், கிட்டப்பார்வை ஆபத்து சுமார் 21% வரை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு சர்வதேச ஆய்வு 2050-க்குள் உலக மக்களில் சுமார் 50% பேருக்கு கிட்டப்பார்வை  இருக்கலாம் என கணித்துள்ளது.

2026  பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழக மருத்துவ மையம் (American University of Beirut Medical Center)-இன் கண் மருத்துவத் துறை ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வுகளும் கிட்டப்பார்வை குறித்து எச்சரிக்கை தருகிறது. இந்தியாவிலும் இந்த வருடம் பள்ளி குழந்தைகளில் AI மூலம் கிட்டப்பார்வை கணிப்பு ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

இதற்கு காரணம் என்ன?

இன்றைய குழந்தைகள் இயற்கையான பகல் வெளிச்சத்தில் வெளியில் மிகக் குறைந்த நேரத்தையும், கணினி மற்றும் தொலைக்காட்சி திரைகளுக்கு முன்னால் என பள்ளி மற்றும் வீட்டிற்குள்ளேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். குறிப்பாக மரபணு ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளிடம், இந்த மாற்றங்கள் கிட்டப்பார்வையினை வேகமாக அதிகரிக்கும் காரணிகளாகிறது.

2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், முதன்முதலில் ஸ்மார்ட்போன்கள் ஒரு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த சாதனமாக  அறிமுகமாயின. சுமார் 2012-ஆம் ஆண்டளவில், அவை நகர்ப்புற வீடுகளில் சாதாரணமாகிவிட்டன. மேலும், 2016-க்குப் பிறகு மலிவான 4G இணைய வசதி கிடைத்ததால், அவற்றின் பயன்பாடு வேகமாகப் பரவியது. இன்று குழந்தை முதல் ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் இல்லை.

அது மட்டுமின்றி இந்தியாவின் கல்வி கலாச்சாரம் வியத்தகு முறையில் விரிவடைந்தது. மேல்படிப்புக்கான கடினப்பயிற்சி  படிப்படியாக இளம் பள்ளிக் குழந்தைகளுக்கும் கூட வழக்கமான ஒன்றாக மாறியது.

இதற்கு அடிப்படை காரணமாகியது கோவிட்-19 பெருந்தொற்று. இதன் விளைவாக உருவான இணையவழி வகுப்புகள் ஸ்மார்ட்போன் அடிப்படையிலான கற்றலை இயல்பாக்கியதன் மூலம், குழந்தைகளின் வாழ்வில் மற்றொரு பெரும் மாற்றத்தை வேகப்படுத்தியது.  அதே நாளடைவில் பழக்கமாகி இன்று ஸ்மார்ட் போனில் அதிகம் நேரங்கள் கழிக்கின்றனர்.

எப்படி தவிர்ப்பது?

குழந்தைகள் தினமும் குறைந்தது 2 மணி நேரம் வெளியில் விளையாட வேண்டும் எனவும்  தொடர்ச்சியான திரை நேரத்தை குறைக்க வேண்டும் என கண் மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.


குறிப்பாக  20-20-20 விதிமுறையை கடைப்பிடிக்க வலியுறுத்துகின்றனர்.

20 நிமிடம் திரை பார்த்தால் 20 விநாடிகள்
20 அடி தூரத்தை பார்க்க வேண்டும். என்பதே அந்த ரூல்.  வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்வது அவசியம்.

செல்போன் இல்லாமல் வாழ்க்கை இல்லை எனும் போது செல்போன் இல்லாமல் எவராலும் இருக்க முடியாது. மேலும் மொபைல் நேரடியாக “கண்ணை கெடுக்கும்” என்று சொல்ல முடியாது. ஆனால் நீண்ட நேரம், மிக அருகில், இடைவெளியின்றி பயன்படுத்துவது கண் பிரச்சினைகளுக்கான ஆபத்தை அதிகரிப்பதாக கண் மருத்துவர்கள் எச்சரிகின்றனர்.

குறிப்பாக எட்டு மாதக் குழந்தைகளிலிருந்தே பல பெற்றோர்களுக்கு, உணவு வேளைகளில் குழந்தைகளின் கவனத்தை் திசைதிருப்ப ஸ்மார்ட்போன்களும் தொலைக்காட்சிகளும் வசதியான கருவிகளாகிவிட்டன. இதன் விளைவாக, குழந்தைகளின் வாழ்வில் மிக இளம் வயதிலேயே திரைகளைப் பார்க்கும் பழக்கம் தொடங்கிவிடுகிறது

கிட்டப்பார்வையை குறைக்க அல்லது குணப்படுத்த முடியுமா?

பொதுவாக ஒருமுறை கிட்டப்பார்வை வந்தால் அது தானாக மறைவது அரிது.ஆனால் அதன் வேகமான முன்னேற்றத்தை  கட்டுப்படுத்த முடியும்.


தினமும் 1.5–2 மணி நேரம் வெளிச்சத்தில் விளையாடும் குழந்தைகளுக்கு கிட்டப் பார்வை உருவாகும் ஆபத்து குறையலாம். மேலும் கிட்டப் பார்வைக்கான லென்ஸ்கள் குழந்தைகளின் பவர் வேகமாக அதிகரிப்பதை குறைக்க உதவலாம்.

கிட்டப்பார்வைப் பெருந்தொற்று மாறிவரும் குழந்தைப் பருவங்கள் எதிர்காலத்தை  மங்கச் செய்து விடாமல் அவற்றிலிருந்து விடுபட்டு பிரகாசமாக ஆக்க வேண்டியது நமது கடமை.

logo
Kalki Online
kalkionline.com