WhatsApp-ல் கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிரைவசி அம்சம்.

WhatsApp-ல் கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிரைவசி அம்சம்.
Published on

மிகவும் முக்கியமான புதிய பிரைவசி அம்சம் வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீப காலங்களில் வாட்ஸ் அப்பில் அறிமுகமான பிரைவேசி கொள்கைகளில் இது மிகவும் முக்கியமான ஒன்று என்பதால் மார்க் ஜுக்கர்பெர்கே இதை நேரடியாக அறிவித்துள்ளார். 

முன்னர் பேஸ்புக் என அழைக்கப்பட்ட மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப்பில், Silence Unknown Caller என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடைய பெயரை வைத்தே இது எதற்காக என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.  சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், முன் பின் தெரியாத எண்களிலிருந்து வரும் வாட்ஸப் அழைப்புகளை, சத்தமில்லாத அழைப்புகளாக மாற்றும் ஒரு புதிய அம்சமாகும். அதாவது நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட் போனில் சேமிக்காத எண்களிலிருந்து அழைப்புகள் வரும் பட்சத்தில், உங்களுடைய ஸ்மார்ட் போன் எவ்விதமான சத்தத்தையும் எழுப்பாது. 

இருப்பினும் இந்த குறிப்பிட்ட அழைப்புகள் தொடர்பான எல்லா விவரங்களும் whatsapp கணக்கில் உள்ள கால் லிஸ்ட் என்கிற இடத்தில் சேமிக்கப்படும். அதன் வழியாக தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வந்தாலும், அது முக்கியமான அழைப்பா என்பதை உங்களால் மதிப்பாய்வு செய்ய முடியும். இந்த புதிய அம்சமானது மோசடி செய்பவர்கள் மற்றும் அறியப்படாத அழைப்பாளர்களிடமிருந்து உங்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், இந்த அம்சம் மூலமாக வாட்ஸப் வழியாக உங்களுக்கு வரும் அழைப்புகள் மீதான முழு கட்டுப்பாட்டையும் உங்களுக்கு வழங்குகிறது. 

இந்த புதிய அம்சத்தால் தேவையற்ற அழைப்புகளை தடுக்க முடியும் என்றாலும், மறுபுறம் வாட்ஸ் அப் பயனர்கள் மத்தியில் வேறு விதமான சலசலப்பையும் இது ஏற்படுத்தியுள்ளது. அதாவது மோசடி செய்பவர்கள் மட்டுமே புதிய எண்களில் இருந்து அழைக்க மாட்டார்கள் அல்லவா? ஏதாவது எமர்ஜென்சி நேரத்தில் நல்ல நோக்கத்திற்காக கூட புதிய எண்களில் இருந்து வாட்ஸ் அப் அழைப்பு மேற்கொள்ளப்படலாம். அதுபோன்ற நேரங்களில் இந்த அம்சத்தால் எந்த ஒலியும் இல்லாமல் போனால் பிரச்சனை ஆகிவிடும். 

இருப்பினும் பெரும்பாலான whatsapp பயனர்கள் இந்த அம்சத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இது வாட்ஸ் அப் வாயிலாக நடக்கும் மோசடி மற்றும் ஸ்பேம் கால்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் என்பதில் அனைவரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com