பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் சென்ற வருடம் காலமானார். அதைத் தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார். இந்த செய்தி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆனபோதிலும் முடிசூட்டு விழா தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.
இந்த நிலையில் 74 வயதாகும் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா இன்று லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்த west minster abbeyயில் மிகப் பிரம்மாண்டாக நடைபெற்றது. இந்த விழாவில் அவருடன் மனைவி கமிலா உடன் இருந்தார். இந்த முடிசூட்டு விழாவை முன்னிட்டு லண்டன் நகரமே வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு திகழ்கிறது.
இந்த விழாவில் பிரிட்டன் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட உலகின் முன்னணி பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். இருப்பினும், மன்னர் சார்லஸின் இரண்டாவது மகன் ஹாரியின் மனைவி, அதாவது சார்லஸின் மருமகள் மேகன் மார்கல் இந்த விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அரசக் குடும்பத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தங்கள் குழந்தைகளுடன் 2020ம் ஆண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்குக் குடியேறினர்.
இந்த மோதலுக்கு முக்கியக் காரணம் இளவரசர் ஹாரியின் மூத்த சகோதரர் இளவரசர் வில்லியம்தானாம். ஒரு முறை வில்லியம்சுக்கும் ஹாரிக்கும் நடைபெற்ற சண்டையின்போது, ‘வில்லியம் தனது சட்டைக் காலரைப் பிடித்து அடித்து தரையில் தள்ளினார்‘ என ஹாரி வெளிப்படையாக புகார் தெரிவித்திருந்தார். இதன் காரணமாகத்தான் இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து வெளியேறினர்.
இந்த நிலையில்தான் தந்தை சார்லஸின் முடிசூட்டு விழாவில் ஹாரி மட்டுமே பங்கேற்று இருக்கிறார். மனைவி மேகன் மற்றும் பேரக்குழந்தைகள் ஆர்க்கி, லில்லிபெட் ஆகியோர் பங்கேற்கவில்லை. தனது கணவருக்கு அரச குடும்பத்தில் ஏற்பட்ட அவமதிப்பை மனதில் வைத்துக்கொண்டுதான் மேகன் மற்றும் குழந்தைகள் இந்த முடிசூட்டு விழாவில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.