கோவையில் ஆன்லைனில் வெடி மருந்து வாங்கியவர் கைது!

முன்விரோதம் காரணமா போலீசார் விசாரணை?
Arrest
Arrest
Published on

கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பனை ஆன்லைனில் வெடி மருந்து வாங்கியதற்காக தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஆன்லைனில் வெடி மருந்து வாங்குபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதேபோல ஆன்லைனில் வெடி மருந்துக்கு பயன்படும் வேதி பொருட்கள் வாங்குபவர்களையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

NIA
NIA

இந்த நிலையில் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி கோவை குரும்பபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஆன்லைனில் பொட்டாசியம் நைட்ரேட் 100 கிராம் மற்றும் சல்பர் 100 கிராம் ஆகியவற்றை ஆர்டர் செய்து அதே மாதம் 20ம் தேதி வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

அதனால் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் செந்தில்குமாரை தொலைபேசியில் அழைத்து , கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நேரடியாக வைத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் செந்தில்குமார் பொருட்களை தான் வாங்கவில்லை என்றும் எனது கடையில் பணிபுரியும் மாரியப்பன் என்பவர் தான் தனது செல்போனில் ஆன்லைன் மூலமாக வேதிப்பொருட்களை ஆர்டர் செய்து வாங்கியதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பனை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் மாரியப்பன் மீது கொலை முயற்சி கஞ்சா வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மாரியப்பன் தனது எதிரியான மகாராஜன் என்பவரை குண்டெறிந்து கொல்ல முயற்சி செய்வதற்காக இந்த வெடிபொருட்கள் வாங்கியதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாரியப்பனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் காவல் நிலைய போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மாரியப்பனை கைது செய்த சரவணம்பட்டி போலீசார் அவர் மீது 1908-வெடி பொருள் சட்ட பிரிவு4(b) இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கைது செய்த மாரியப்பனை போலீசார் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி செந்தில் ராஜா முன் ஆஜர்படுத்தினர். இதை விசாரித்த நீதிபதி செந்தில் ராஜா மாரியப்பனை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சரவணம்பட்டி போலீசார் மாரியப்பனை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com