ஆறாயிரம் கோடி ரூபாய் மோசடி நிதி நிறுவனத்திடம் ஐந்து கோடி லஞ்சம் கேட்ட போலீஸ் அதிகாரி!

ஆறாயிரம் கோடி ரூபாய் மோசடி நிதி நிறுவனத்திடம் ஐந்து கோடி லஞ்சம் கேட்ட போலீஸ் அதிகாரி!
Published on

திக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் போலி நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்துபோவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் (ஐ.எப்.எஸ்.) நிதி நிறுவனம் பொதுமக்களிடம் கோடிக்கணக் கில் பணத்தை சுருட்டி ஏமாற்றி இருப்பது அம்பலமாகி உள்ளது.

இந்த நிதி நிறுவனத்தில்  முதலீடு செய்யும் பணத்துக்கு 10 முதல் 25 சதவீதம் வரை ஒவ்வொரு மாதமும் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதை நம்பி பொதுமக்கள் இந்த நிதி நிறுவனத்தில் அதிக அளவில் பணத்தை முதலீடு செய்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் இருந்து 84 ஆயிரம் பேரிடம் இருந்து ஆறாயிரம் கோடி ரூபாயை இந்த ஐ.எப்.எஸ். நிறுவனம் வாரி சுருட்டி இருக்கிறது. ஆனால், பொது மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி வட்டி மற்றும் முதலீட்டுத் தொகையை அளிக்காததால் ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் மீது பொதுமக்கள் புகார் அளித்தனர். இதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக ஐ.எப்.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகள் என 31 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து ஐ.எப்.எஸ். நிறுவனத்தின் இயக்குனர்கள் உள்பட 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான 49 அசையா சொத்துக்கள் மற்றும் 1.12 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொருளாதார குற்றப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடாக் உத்தரவின் பேரில் ஐ.எப்.எஸ். நிதி நிறுவன மோசடி தொடர்பான விசாரணையை நடத்துவதற்காக டி.எஸ்.பி.கபிலன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டினார். அப்போது, ‘நிறுவனத்துக்கு சாதகமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் எனக்கு என்ன செய்வீர்கள்?’ என்று கபிலன் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது டி.எஸ்.பி.கபிலன் ஐந்து கோடி ரூபாய் வரையில் பேரம் பேசியதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் முதல்கட்டமாக, முப்பது லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கபிலன் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

இது பொருளாதார குற்றப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் டி.எஸ்.பி. கபிலன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று இரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டி.எஸ்.பி. கபிலன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக விசாரணையை தொடங்கி உள்ளனர். லஞ்ச புகாருக்குள்ளாகி இருக்கும் டி.எஸ்.பி. கபிலன் நீலாங்கரையில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு நேற்று இரவு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திடீரென சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டபோது, கட்டுக்கட்டாக பணமும், சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து கபிலன் மீது அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களுக்காக உரிய விசாரணை நடத்தி நிவாரணம் பெற்றுத்தர வேண்டிய போலீஸ் அதிகாரி ஒருவரே மோசடி நிதி நிறுவனத்திடம் விலை போய் இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பொதுமக்கள் மத்தியிலும், காவல்துறை வட்டாரத்திலும் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com