

மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் காமராஜர் இருவரும் நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைப்பது போலவும், நாளைய முதல்வர் நீதான் என்று கூறுவது போலவும் சித்தரித்து ஒட்டி உள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த பலரும் திரை துறையில் இருந்து வந்தவர்கள் என்பதால் திரைத்துறையில் உச்சபட்ச நட்சத்திரமாக உயரும் பெரும்பான்மையான நடிகர்கள் அரசியலில் கால்ப்பதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இதன் காரணமாகவே திரைத்துறையின் உச்சபட்ச நட்சத்திரங்கள் பலரும் தமிழ்நாட்டு அரசியலில் களம் கண்டிருக்கின்றனர். இதற்கு கடந்தகால வரலாறுகளே சான்றாகும்.
மேலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நேரங்களில் திரைத் துறையில் இருக்கக்கூடிய முக்கிய நடிகர்கள் தேர்தல் அரசியலில் களமிறங்க உள்ளார்கள் என்ற பேச்சு எழுவதும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளார் என்ற பேச்சு முக்கியத்துவம் அடைந்துள்ளது.
இதற்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினுடைய நடவடிக்கையும் முக்கிய காரணமாக மாறி உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தொடர்ந்து நடைபெறும் ஆலோசனை கூட்டங்கள், நிகழ்ச்சிகள், மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவை ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருவது நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசித்திற்கான முன்னெடுப்பு என்று விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
அதே நேரம் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று சொல்லப்பட்டாலும், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக தற்போதே விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பணிகளை தொடங்கி இருக்கின்றனர் என கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் "தம்பி பொறுத்தது போதும், வா தமிழ்நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க, நாங்கள் அமர்ந்த அரியாசனம் உனக்காக காத்திருக்கிறது, நாளைய முதல்வர் நீயே, என்று தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் காமராஜரும், எம்.ஜி.ஆரும் அழைப்பது போன்று அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.