தஜிகிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
தஜிகிஸ்தான் நாட்டின் முர்கோப் நகருக்கு மேற்கே கிட்டத்தட்ட 67 கிலோமீட்டர் தொலைவில், 20 கிலோமீட்டர் ஆழத்தில் தஜிகிஸ்தான் நேரப்படி அதிகாலை 5:37 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தானில் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது. குறைந்த மக்கள்தொகை கொண்ட இந்த பிரதேசம் பாமிர் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.0 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் அலறி அடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். பெரிய கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியான மனநிலையுடன் வெளியே ஓடிவந்தனர்.
கடந்த வாரங்களில் துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து உலகமே அச்சத்தில் மூழ்கியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.8, 7.2 மற்றும் 6.8 ஆக அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் துருக்கியில் மட்டும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிரியாவில் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து உலகின் பிறபகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அதன் பிறகு நியூசிலாந்து உட்பட சில நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் அசாம் மற்றும் மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் தஜிகிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.