வரலாறு காணாத ஒரு நாள் மின்சாரப் பயன்பாடு!

வரலாறு காணாத ஒரு நாள் மின்சாரப் பயன்பாடு!

Published on

மிழ்நாட்டில் மொத்தம் 2.67 கோடி பேர் மின் நுகர்வோர்களாக உள்ளனர். நாட்டின் தினசரி மின் தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகா வாட் ஆகும். இதில் விவசாயத்தின் பங்கு 2,500 மெகா வாட்டாக உள்ளது. பொதுவாக, கோடை காலம் வந்தால் 16 ஆயிரம் மெகா வாட் மற்றும் குளிர் காலத்தில் 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பயன்படுத்தப்படும். தற்போது இந்த ஆண்டுக்கான கோடை காலம் தொடங்கி இருப்பதால், சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், மின் நுகர்வோர்களின் ஏசி, மின் விசிறி, ஏர்கூலர் உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

கோடைக் காலத்தின் பொதுவான தினசரி மின் நுகர்வான 16 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் என்கிற அளவு என்பது தற்போது கூடியிருக்கிறது. மேலும், விவசாயப் பிரிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 1.50 லட்சம் மின் இணைப்புகளால், அந்தப் பிரிவில் மட்டும் மின்சாரப் பயன்பாடு கூடுதலாக 727 மெகா வாட் அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், கடந்த மாதம் 4ம் தேதி தினசரி மின் தேவை முதல் முறையாக 17,584 மெகா வாட்டாக அதிகரித்து இருந்தது.

இதற்கு முன் சென்ற 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி 17,563 மெகா வாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதேபோல், கடந்த மாதம் 15ம் தேதி தினசரி மின் தேவை 17,647 மெகா வாட்டாக அதிகரித்தது. ஆனால், நேற்று முன்தினம் (ஏப்ரல் 20) தமிழகத்தில் 42.37 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. இதன்படி, தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் அதிகபட்ச மின்சாரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இது குறித்து, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், "தமிழக வரலாற்றில் முதன்முறையாக 42.37 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்தத் தேவை எவ்வித தடையுமின்றி பூர்த்தி செய்யப்பட்டது" என்று தெரிவித்து இருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com