தமிழக அரசின் மாவட்டத்திற்கு ஒரு சுகாதார நடைபாதை!

தமிழக அரசின் மாவட்டத்திற்கு ஒரு சுகாதார நடைபாதை!

ரசின் திட்டங்கள் யாவும் மக்களின் நலத்தை முன்னிட்டு அமையும் எனினும் "நடப்போம் நலம் பெறுவோம்" எனும் நோக்கில் அமையப்போகும் அரசின் சுகாதார நடைபாதைத் திட்டம் உண்மையில் பாராட்டுக்குரியது.

       சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் 2023 -24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கோரிக்கையின்போது சட்டப்பேரவையில் "நடப்போம் நலம் பெறுவோம்" எனும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எட்டு கிலோமீட்டர் தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை அன்று நலவாழ்வு பெறுவதற்கான நடைப் பயிற்சியை (ஹெல்த்வாக்) ஊக்குவிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப் படும் என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட நிர்வாகமும் பொது சுகாதாரத்துறையினரும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சுகாதார நடைபாதைக்கான இடத்தை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

        அதன்படி 8 கிலோமீட்டர் தூரத்திற்கு சுகாதார நடைபாதை அமைக்க  தர்மபுரி ஒட்டப்பட்டியில் தகுந்த இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு தர்மபுரி நகரை ஒட்டி உள்ள ஏ ஜட்டி அல்லி ஊராட்சியில் சுகாதார நடைபாதை அமைக்கப்பட உள்ள பாதையைப் பார்வையிட்டனர். ஒட்டப்பட்டியில் துவங்கும் இந்த பாதை காமராஜ் நகர். ஹவுசிங் போர்டு வழியாக சர்க்யூட் ஹவுஸில் முடிவடையும் வகையில் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. 12ஆம் தேதி மாவட்ட கலெக்டர் சாந்தி, மருத்துவப்பணிகள் இயக்குனர் சாந்தி, சுகாதாரப் பணிகள் ஒத்துணை இயக்குனர் ஜெயந்தி. கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் ஒட்டப்பட்டிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்

     இதையொட்டி இத்திட்டத்தை செயல்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் பொது சுகாதாரத் துறையும் மும்முரமாக  செயல்பட்டு வருகிறது. “சுகாதார நடைபாதை முழுவதும் பேவர் பிளாக் எனப்படும் சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட்டு  நடப்பதற்கான தனி பாதையாக காட்டப்படும். பாதையின் இருபுறமும் மரங்கள் நடப்பட்டு பசுமையாக இருக்க வேண்டும். இந்த நடைபாதை செல்லும் வழியில் வாகன போக்குவரத்து அதிகம் இல்லாமலும்  குப்பைகள் இன்றியும்  சுகாதார நடைத்திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்ட நடைபாதையாக இருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பராமரிக்கப்பட்ட நடைபாதையை பயன்படுத்த இலவசம் என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் நடைபாதை  மக்கள் எளிதில் அணுகக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தூரத்தைக் குறிக்கும் பலகைகள் நிரந்தரமாக நிறுவ வேண்டும். நடைப்பயிற்சி செய்பவர்கள் அவர்கள் விரும்பும் தூரத்தை கடக்க இது உதவும். நடைபாதையில் மரம் வளர்ப்பதையும் பராமரிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அரசு சாரா நிறுவனங்கள், நடைபயிற்சி கிளப்புகள் போன்றவற்றின் உதவியுடன் அடையாளம் காணப்பட்ட இடங்களில் இருக்கைகள் அமைக்க வேண்டும். அதேபோல் நடந்து செல்பவர்கள் ஓய்வெடுக்கும் இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். நடைபாதையில் விழிப்புணர்வு வாசகங்கள் அமைக்க வேண்டும். நடைபாதை துவங்குமிடம்  முதல் முடியும் இடம் வரை மைல் கற்கள் அமைக்க வேண்டும்.

      ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது சுகாதாரத் துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் ஏற்படுத்த வேண்டும்.” இவ்வாறு சுகாதார நடைபாதை அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

       "உலகம் முழுவதும் பரவிய கொரோனாவிற்கு பின்னர் ஹார்ட் அட்டாக் பாதிப்பால் பலர் இறப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஹார்ட் அட்டாக் போன்ற உயிர் பறிக்கும்  நோய்களிலிருந்து நம்மை பேணிக்காக்க எளிமையான நடைபயிற்சி அவசியமாகும். மேலும் இந்த நடைபாதையை மக்கள் பயன்படுத்துவதற்கு வந்து செல்ல வசதியாக போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி, இளைப்பாற இருக்கைகள் முதல் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் ஹெல்த் முகாம் ஆகியவை செயல்படுத்தப்படும். இந்த நடைபாதையை அந்த பகுதி ஊராட்சி நிர்வாகம் பராமரிக்க உள்ளது இந்த நடை பாதையில் தினமும் நடப்பதற்கு பயன்படுத்துவதன் மூலம் மக்கள் தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்" என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள் 

அரசு கொண்டு வரும் திட்டங்களை பயன்படுத்துவதுடன் அதை சேதப்படுத்தாமல் பாதுகாத்து  நலம் பெற வேண்டியது நம் கடமை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com