வடமாநிலங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் நிலச்சரிவு, மற்றும் அதிர்வின் காரணமாக, உத்தரகாண்ட் மாநிலத்தின், 'ஜோஷிமத்' எனும் சுற்றுலாத்தலம் பயங்கர பாதிப்பைக் கண்டது. பல ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு, கட்டிடங்கள் மற்றும் நிறைய உயிர்கள் பலியான சம்பவம் மக்களைத் திகிலில் தள்ளியது.
தற்போது இன்று நேபாளத்தை மையமாகக் கொண்டு, சுமார் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், டெல்லி, ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசத்திலும் உணரப்பட்டது.
மக்கள் நிலநடுக்கம் மீண்டும் ஏற்படுமோ என்ற பீதியில் உள்ளனர்.
வட மாநிலம் டெல்லிப் பகுதியிலிருந்து, பூமியின் ஆழத்தில் உள்ளப் பாறைத் தகடுகள், இமயமலை நோக்கி அடிக்கடி நகருவதால் இப்படிப்பட்ட நிலநடுக்கம் ஏற்படுகிறது.
குறிப்பாக நேபாளம் இமயமலைப் பகுதியிலிருப்பதால், நில அதிர்வு பெரும்பாலும் இங்கே மையம் கொண்டிருக்கும். எப்போதுமே இதன் தாக்கம் இந்தியாவின் வட மாநிலங்களில் எதிரொலிக்கும்.
இயற்கை இப்போதெல்லாம் பெரும் சீற்றத்துடன்தான் காணப்படுகிறது. டெல்லியில் 90 சதவீத வீடுகள், சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தாங்கும் சக்தியற்றவை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்த எச்சரிக்கையும் விடப்பட்ட நிலையில், செவிடன் காதில் ஊதிய சங்காய் எடுபடாமல் போனது. டெல்லியில் நிறைய பிரம்மாண்ட கட்டிடங்கள், நிபுணர்களின் முன்னெச்சரிக்கை ஆலோசனையை கவனத்தில் கொள்ளாமல் கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் குறிப்பாக, தலை நகர் சென்னையில், குறியீட்டு எண் 2 என்று இருப்பதால், நிலநடுக்க வாய்ப்புகள் குறைவே. தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும், குறியீட்டு எண் 2 அல்லது 3 என இருப்பதால், ஆபத்தான நிலநடுக்கத்திற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.