இயர்பட்ஸ் பயன்படுத்தியதால், செவித்திறனை இழந்த மாணவன்.

இயர்பட்ஸ் பயன்படுத்தியதால், செவித்திறனை இழந்த மாணவன்.

த்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவன் தொடர்ந்து இயர்பட்ஸ் பயன்படுத்தியதால் காதுகள் செவிடான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இன்றைய காலகட்டத்தில் ஹெட்போன்ஸ், இயர்போன்ஸ், இயர்பட்ஸ் பயன்படுத்துவது மக்களிடையே அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் இதில் ஏதாவது ஒன்றை கட்டாயம் வைத்திருப்பார்கள். சிலர் சாதாரணமாக எங்கேயாவது நடந்து செல்ல வேண்டுமென்றால் கூட, அவற்றை காதுகளில் மாட்டிக்கொண்டுதான் போவார்கள். இவற்றில் இயர்பட்ஸ் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் இயங்குவதால், பலரும் அவற்றை தங்கள் காதுகளிலிருந்து காட்டுவதே கிடையாது. 

பல மணி நேரங்கள் தொடர்ந்து காதிலேயே வைத்து அதைப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பழக்கம் தொடர்ந்து இருக்கும் பட்சத்தில், காலப்போக்கில் மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இருப்பினும் மக்கள் இதையெல்லாம் செவிகொடுத்துக் கேட்காததால், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுவன் தன் செவித் திறனையை இழந்திருக்கிறான். 

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது மாணவன், எல்லா இளைஞர்களைப் போலவும் இசையின் மீது கொண்ட அதிக ஆர்வத்தால், ஒரு நாளைக்கு பல மணி நேரம் இயர்பட்ஸ் மூலமாக பாடல்கள் கேட்பது, காணொளிகள் பார்ப்பது உள்ளிட்டவற்றை செய்து வந்துள்ளான். இளம் வயதில் இருப்பவர்கள் அதிகபட்சமாக 75 முதல் 80 டெசிபல் வரை மட்டுமே ஒலியைக் கேட்க வேண்டும். இதற்கு மேல் அதிக சத்தத்தை கேட்டால் செவித்திறன் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மாணவன் தினமும் 104 முதல் 112 டெசிபல் ஒலியில் பாடல்களைக் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இது மட்டுமில்லாமல் தனது நண்பர்களின் ஹெட்போன் சாதனங்களையும் கடனாக வாங்கிப் பயன்படுத்தி வந்துள்ளார். 

இதன் காரணமாக நாளடைவில் இவரது காதுகளில் வலி ஏற்படத் தொடங்கி, செவித்திறன் குறைய ஆரம்பித் துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் இவருடைய காது முழுமையாக கேட்கும் திறனை இழந்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுவனின் பெற்றோர், மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், அதிகமாக இயர்பட்ஸ் பயன்படுத்தியதால் இவரது காதுகளில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று காரணமாகவே செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மெல்ல மெல்ல செவித்திறனை திரும்ப பெற்று வருகிறார். இருப்பினும் முழுமையாக இவருடைய செவித்திறன் கிடைக்குமா என்பதில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இனி இயர்பட்ஸ் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நீங்களும் இசைப் பிரியராக இருந்தால், இயர்பட்ஸ் பயன்படுத்தி பாடல்களைக் கேட்கும்போது குறைந்த சத்தத்தில் வைத்துக் கேளுங்கள். அதேபோல அதிக நேரம் இயர்பட்ஸ்-ஐ பயன்படுத்தவும் வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com