எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைக்கப்போகும் தமிழ்ப் பெண்!
தமிழகத்தின் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி. இவருக்கு எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பது நீண்ட நாளைய விருப்பம். ’ஏஷியன் ட்ரெக்கிங் இன்டர்நேஷனல்’ எனும் தனியார் நிறுவனம், தேர்வு செய்துள்ள குழுவினர் காத்மாண்டுவில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏற திட்டமிட்டு உள்ளனர். இந்தக் குழுவினருடன்தான் முத்தமிழ்ச்செல்வியும் 8,848 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை ஏற இருக்கிறார். இந்தக் குழுவுடன் இணைந்து எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதிக்க முத்தமிழ்ச்செல்வி நேற்று சென்னையிலிருந்து புறப்பட்டு நேபாளம் கிளம்பிச் சென்றுள்ளார்.
முன்னதாக, எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதிக்க தனக்கு நிதியுதவி செய்யும்படி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார் முத்தமிழ்ச்செல்வி. சென்ற மாதம் மார்ச் 28ம் தேதி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக 10 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினார். இது தவிர, இவருக்கு தன்னார்வலர்கள் மூலமும் 15 லட்சம் ரூபாய் நிதி உதவியும் கிடைத்துள்ளது.
எந்த ஒரு உச்சத்தைத் தொடுவதையும் பொதுவாக, எவரெஸ்ட் சிகரத்தோட ஒப்பிடவதே அனைவரின் வழக்கம். அந்த வகையில் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறப்போகும் வீர மங்கை முத்தமிழ்ச்செல்விக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கப்போகும் முதல் தமிழ்ப்பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.