தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான யூடியூப் சேனல் ஒன்று 34 லட்சம் மதிப்பிலான கேமராவை வாங்கியுள்ளனர்.
Youtube தளம் பிரபலமானதிலிருந்தே அதில் பலரும் காணொளிகள் பதிவேற்றி தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக யூடியூபில் காணொளி பதிவேற்றினால் பிரபலம் அடைவது மட்டுமின்றி பணம் ஈட்டும் வாய்ப்பும் இருப்பதால் தற்போது பலரும் அதில் காணொளி தயாரித்து பதிவேற்றுகின்றனர்.
தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான யூடியூபர்கள் உள்ளனர். அதில் சமையல் சார்ந்த காணொளிகளை பதிவிடுபவர்களும் உள்ளனர். இவர்கள் பலவிதமான உணவுகளை வித்தியாசமாகவும் பிரம்மாண்டமாகவும் சமைத்து தங்களின் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கையை லட்சக்கணக்கில் வைத்துள்ளனர். இவர்களில் முதன்மையானதாக “வில்லேஜ் குக்கிங் சேனல்” பெரும்பாலும் அனைவராலும் அறியப்பட்ட யூடியூப் சேனலாகும். முற்றிலும் கிராமத்து முறையில் இவர்கள் சமைக்கும் வீடியோக்களுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர்.
மொத்தம் 2 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் வைத்திருக்கும் இவர்கள், அதன் மூலமாக அதிகப்படியான வருவாயையையும் ஈட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்திலும் இவர்கள் இடம்பெற்றிருந்தனர். ராகுல் காந்தியும் இவர்களின் சமையல் வீடியோ ஒன்றில் கலந்து கொண்டார். இதுவரை அந்த காணொளி ஆறு கோடிக்கு அதிகமான பார்வைகளைக் கடந்து இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இவர்கள்தான் தற்போது 34 லட்சம் மதிப்பான ரெட் ரேப்பர் வகை கேமரா வாங்கியுள்ளனர். இதை சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கலந்து கொண்ட நேர்காணலில் அவர்கள் தெரிவித்தனர். இதைக் கேள்விப்பட்ட லோகேஷ் கனகராஜ் ஆச்சரியப்பட்டு "எனக்குத் தெரிந்து இந்த வகை கேமராவில் காணொளி எடுக்கும் ஒரே யூடியூப் சேனல் நீங்கள்தான்" என்று அவர்களைப் புகழ்ந்தார்.
மேலும், அக்டோபர் 18ஆம் தேதி வெளிவர உள்ள லியோ திரைப்படம், 300 கோடி மதிப்பிலான 'ரெட் ரேப்பர்' வகை கேமராவில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.