
கூகுளில் புரோகிராமர்களைத் தேர்வு செய்ய, ஆன்லைனில் நேர்காணல் நடத்துவது வழக்கம். இந்த நேர்காணல்களில், விண்ணப்பதாரர்களுக்கு உடனடி புரோகிராமிங் சோதனைகள் (real-time coding challenges) வழங்கப்படும்.
ஆனால், பல விண்ணப்பதாரர்கள் கேமராவுக்கு வெளியே ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி, நொடிகளில் பதில்களை உருவாக்குகிறார்கள். இது, நேர்மையாக விண்ணப்பிக்கும் நபர்களின் வாய்ப்பைப் பறிப்பது மட்டுமல்லாமல், நிறுவனத்தின் தேர்வு முறையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கிறது.
இந்த மோசடி அதிகரித்ததால், கூகுள் ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். "ஆன்லைன் நேர்காணல்களை முழுமையாகக் கைவிட முடியுமா?" என்று தலைமை நிர்வாகிகளிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
இதைக் கேட்ட சுந்தர் பிச்சை, "பணியாளர்கள் நேரடியாகவும், ஆன்லைனிலும் வேலை செய்வதால், இனி நேர்காணலின் ஒரு பகுதியாவது நேரில் நடப்பது அவசியம்"எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சிக்கல் கூகுளுக்கு மட்டும் உரியது அல்ல. அமேசான், சிஸ்கோ, மெக்கின்சி போன்ற பல நிறுவனங்களும் இந்த மோசடிக்கு எதிராகத் தங்கள் தேர்வு முறைகளை மாற்றி வருகின்றன.
ஏஐ சாட்போட் 'கிளாட்'-ஐ உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனம், விண்ணப்பதாரர்கள் "ஏஐ உதவியின்றி தங்கள் திறன்களை" நிரூபிக்க வேண்டும் என்று தெளிவாக அறிவித்துள்ளது.
ஏன் இந்த மாற்றம்?
கொரோனா பெருந்தொற்று பரவியிருந்த சமயத்தில், நேரில் சந்தித்து வேலைக்கு ஆள் எடுப்பது பெரும் சவாலாக இருந்தது.
அந்த நேரத்தில் தான் ஆன்லைன் நேர்காணல் முறை பல நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
வீட்டிலிருந்தே விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்ய முடிந்தது நேரத்தையும், செலவையும் வெகுவாகக் குறைத்தது.
பலரும் இந்த முறையை எளிதானதாகவும், பாதுகாப்பானதாகவும் கருதினர். தொலைதூரத்திலிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது..
ஏஐ-யை மட்டும் பயன்படுத்தி வேலை பார்ப்பவர்கள், உண்மையான திறமையால் சாதிக்கும் மற்றவர்களைக் கண்டு பொறாமைப்படும் அவலமும் இந்தச் சமுதாயத்தில் மெல்லப் பரவி வருகிறது.
ஆனால், தற்போது ஏஐ தொழில்நுட்பம் பரவலாகியிருக்கும் நிலையில், ஆன்லைன் நேர்காணல்களில் நம்பகத்தன்மை குறைந்து வருவது கவலை அளிக்கிறது.
இனி, கூகுள் போன்ற நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள், ஏஐ-யை மட்டும் நம்பி ஏமாறாமல், தங்களின் உண்மையான திறமையைக் காட்ட வேண்டிய நேரம் இது.
இது, தொழில்நுட்பம் எவ்வளவுதான் வளர்ந்தாலும், ஒரு மனிதரின் நேர்மையான திறமைக்கு ஈடு இணையானது எதுவுமில்லை என்பதை நிரூபிக்கிறது.