ஒரு எலியைக் கொன்றதற்கு முப்பது பக்க குற்றப்பத்திரிக்கை!

ஒரு எலியைக் கொன்றதற்கு முப்பது பக்க குற்றப்பத்திரிக்கை!
Published on

த்தரப்பிரதேச மாநிலம், புடான் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவர் சில மாதங்களுக்கு முன்பு தங்கள் குடும்பத்துக்குத் தொல்லை கொடுத்து வந்த எலி ஒன்றின் வாலில் கல்லைக் கட்டி நீரில் மூழ்கடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. விலங்கு ஆர்வலர் விக்கேந்திர ஷர்மா அந்த எலியைக் காப்பாற்ற முயற்சி செய்தபோதும் அது இறந்துவிட்டது. அதைத் தொடர்ந்து மனோஜ் குமார் மீது மிருக வதைச் சட்டத்தின் கீழ் விக்கேந்திர ஷர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறை மனோஜ் குமாரை அழைத்து விசாரித்தது. அதன் பின்னர் அவர் மீது ஐபிசி பிரிவு 429 (விலங்கை அறுப்பது) மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார், பிறகு உள்ளூர் நீதிமன்றத்தால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதற்கிடையே இறந்த எலி புடானில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கே எலியை பரிசோதனைச் செய்ய மறுத்துவிட்டனர். பின்னர் எலியின் சடலம் பரேலியில் உள்ள இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு செய்யப்பட்ட சோதனையில் எலி நுரையீரல் தொற்றின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக நிபுணர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், மனோஜ் குமாருக்கு எதிராக புடான் நீதிமன்றத்தில் முப்பது பக்க குற்றப்பத்திரிகையை உத்தரப்பிரதேச காவல்துறை தாக்கல் செய்திருக்கிறது. அதில் காவல்துறை விசாரணை, தடயவியல் அறிக்கை, ஊடகங்களில் உள்ள வீடியோக்கள் மற்றும் பல்வேறு துறைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தக் குற்றப்பத்திரிகையைத் தயார் செய்ததாகவும், குற்றப்பத்திரிக்கை வலுவாக இருக்க, பிரேத பரிசோதனை அறிக்கை ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அதிகாரி அலோக் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கைப் பற்றி பேசிய மூத்த வழக்கறிஞர் ராஜீவ் குமார் சர்மா, "விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ், பத்து ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் ஐபிசி 429வது பிரிவின் கீழ், ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்துப் பேசிய மனோஜ் குமாரின் தந்தை மதுரா பிரசாத் , "எலி, காகங்கள் மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் உயிரினங்கள். அவற்றைக் கொல்வது தவறில்லை. எங்கள் வீட்டு மண் பாத்திரங்களை எலிகள் சேதப்படுத்தியதால் எங்கள் குடும்பத்துக்கு மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிரச்னை ஏற்பட்டது. அதனால் எனது மகன் அதனைக் கொன்றிருக்கலாம். இதற்காக என் மகன் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் ஆடு, கோழிகளை அறுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எலிகளைக் கொல்லும் ரசாயனத்தை விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com