மனிதம் மிளிரும் தருணம்; பிளிரும் யானை குட்டி ஈனுவதற்காக ரயில் நிறுத்தம்!

Elephant delivered in Jharkhand railway track
Elephant delivered in Jharkhand railway track
Published on

மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே அன்பும், அக்கறையும் நிறைந்த ஒரு அற்புதமான நிகழ்வு ஜார்க்கண்டில் அரங்கேறியுள்ளது. காட்டு யானை ஒன்று தண்டவாளத்தில் குட்டி ஈனுவதற்காக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஒரு ரயில் நிறுத்தப்பட்டது. பிறந்த குட்டியுடன் தாய் யானை பின்னர் காட்டிற்குள் பத்திரமாக சென்ற காட்சி காண்போரின் மனதை நெகிழவைத்தது.

இந்த இதயம் கனிய வைக்கும் நிகழ்வு காணொளியாக பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், இந்த காணொளியை X தளத்தில் பகிர்ந்து, மனிதர்களும் வனவிலங்குகளும் இணைந்து வாழும் இந்த அழகிய தருணத்தை பாராட்டினார்.

“மனித-விலங்கு மோதல்கள் குறித்த செய்திகளுக்கு அப்பால், மனிதர்களும் வனவிலங்குகளும் இணைந்து வாழ்ந்த இந்த அற்புதமான உதாரணத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜார்க்கண்டில் ஒரு ரயில், யானை குட்டி ஈனுவதற்காக இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டது. தாயும் குட்டியும் மகிழ்ச்சியாக காட்டிற்கு செல்லும் காணொளி இதோ,” என்று அவர் பதிவிட்டார்.

காணொளியில், தாய் யானை தண்டவாளத்தின் அருகே நின்று குட்டி ஈனுவதை காணமுடிகிறது. இதற்கு வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் உறுதுணையாக இருந்தனர். பயணிகளின் பாதுகாப்பையும், யானையின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், அப்பகுதி அமைதியாக வைக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் அமைச்சகமும், இந்திய ரயில்வேயும் இணைந்து, நாடு முழுவதும் 3,500 கிலோமீட்டர் தண்டவாளங்களை ஆய்வு செய்து, 110-க்கும் மேற்பட்ட வனவிலங்கு நடமாட்ட பகுதிகளை அடையாளம் கண்டுள்ளன. இந்த பகுதிகளில் விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

“இந்த முயற்சிகள் இதயத்தை தொடும் பலன்களை தந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. யானை குட்டி ஈன உதவிய ஜார்க்கண்ட் வனத்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பாராட்டுகள்,” என்று அமைச்சர் யாதவ் கூறினார்.

இதையும் படியுங்கள்:
இனி மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு..!
Elephant delivered in Jharkhand railway track

இந்த காணொளி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, பலரும் இந்த மனிதாபிமான செயலை பாராட்டினர். “இன்று நான் பார்த்த மிகச்சிறந்த செய்தி இது. பகிர்ந்தமைக்கு நன்றி,” என்று ஒருவர் கருத்து தெரிவித்தார். “யானையும் அதன் குட்டியும் பாதுகாப்பாக இருப்பது மகிழ்ச்சி. ரயில்வே ஊழியர்களுக்கும் பாராட்டுகள்,” என்று மற்றொருவர் குறிப்பிட்டார்.

மனிதர்களின் இந்த அன்பான செயல், வனவிலங்குகளுடன் இணைந்து வாழ்வதற்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com