மத்திய பிரதேச மாநிலம் முங்கோலி கிராமத்தில் வயல்வெளியில் பெற்றோருடன் இருந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் மூடப்படாமல் இருந்த 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷெஹோர் எனும் பகுதியில் உள்ளது முங்கோலி என்ற கிராமம். இங்கு ராகுல் குஷ்வாஹாலி, ராணி தம்பதியினரின் இரண்டரை வயது மகள் சிருஷ்டி பெற்றோருடன் அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது, பெற்றோர் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, குழந்தை சிருஷ்டி அங்கு மூடப்பாடமல் இருந்த 300 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் கடந்த செவ்வாய்கிழமை மதியம் 2.45 மணியளவில் விழுந்துள்ளார். குழந்தையை காணத பெற்றோர் அருகில் உள்ள பகுதியில் தேடி உள்ளனர். பின்னர், அங்கிருந்த மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர், கிராமவாசிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தி தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவத்தில் இடத்திற்கு வந்துள்ளனர். ஆழ்துளை கிணற்றில் 300 அடி ஆழத்தில் உள்ள குழந்தை சிருஷ்டி இருக்கும் குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், கேமரா குழிக்குள் செலுத்தப்பட்டு குழந்தையின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஆழ்துளை கிணற்றை சுற்றியுள்ள பகுதியின் அருகே மற்றொரு துளையிட்டு குழந்தையை மீட்கும் பணியில் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் ஈடுபட்டுள்ளன.
விபத்து நடந்த பகுதியில் கூடுதல் மேஜிதிரேட் பிரிஜேஷ் சக்சேனா, காவல் கண்காணிப்பாளர் மாயங் அவஸ்தி ஆகியோர் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் நடைபெறும் இடத்தில் மருத்துவ குழுவினர் மற்றும்ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.300 அடி ஆழத்தில் விழுந்த குழந்தை சிருஷ்டியை மீட்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகிறது. இந்த விபத்து குறித்து அறிந்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் குழந்தை சிருஷ்டியை மீட்க அனைத்து ஏற்பாடுகளை விரைவாக செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சிருஷ்டி காப்பாற்றப்படவேண்டும் என அனைத்து தரப்பட்ட மக்களும் பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலவும் மூடப்பாடமல் உள்ள ஆழ்துளை கிணற்றை குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொண்டுவருகின்றன. ஆனால், சிலரின் கவனக்குறைவு காரணமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மரணங்கள் தொடர் கதையாகி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த சிறுவன் சுஜித் மரணம் உட்பட தமிழ்நாட்டில் கடந்த 19 ஆண்டுகளில் 15 மேற்பட்ட குழந்தைகள் மூடப்பாடமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த அகால மரணமடைந்துள்ளன. அதேபோல் நாடு முழுவதும் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மரணமடைந்துள்ளனர் உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை எல்லாம் பதிவுச் செய்யப்பட்டதால் ஆழ்துளை குழந்தை மரணங்கள் குறித்து தெரியவருகிறது. ஆனால், ஏட்டளவில் கூட பதிவுச் செய்யப்படாமல் மரணித்த குழந்தை மரணங்கள் எத்தனையோ..!