இந்தியாவின் ஜனாதிபதி வசிக்கும் அரண்மனை போன்ற மிகப் பெரிய மாளிகைதான் ராஷ்டிரபதி பவன். புது டெல்லியின் மத்தியில் 300 ஏக்கர் பரப்பளவில் இந்த மாளிகை பிரம்மாண்டமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அரசு தலைவர் தங்கும் உலகின் பெரிய கட்டிடங்களில் ஒன்றான ராஷ்டிரபதி பவனை பிரிட்டிஷ் பொறியாளர் எட்வின் லுட்யன்ஸ் வடிவமைத்துள்ளார்.
ராஷ்டிரபதி பவனில் மொத்தம் 340 அறைகள் உள்ளன. ராஷ்டிரபதி பவன் வரலாற்றில் இந்த மாளிகையில் இது வரை எந்த ஒரு திருமணமும் நடைபெற்றது இல்லை. முதல்முறையாக இப்போது திருமணம் ஒன்று நடைபெற உள்ளது.
சுதந்திரத்திற்கு முன்பு, இந்த கட்டிடம் இந்திய வைஸ்ராய்க்கு ஒதுக்கப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பிறகு இந்திய ஜனாதிபதிக்கு இந்த கட்டிடத்தை ஒதுக்கினார்கள். இந்தக் கட்டிடத்தில் எப்போதும் அரசு சார்ந்த சிறிய விழாக்களும் , பல விருந்து ஏற்பாடுகளும் நடைபெற்றுள்ளன. அரசு சாராத எந்த ஒரு நிகழ்ச்சியும் இதுவரை இந்த மாளிகையில் நடைபெற்றது இல்லை. வரலாற்றில் முதல் முறையாக இங்கு ஒரு திருமணம் நடைபெற உள்ளது. அந்த சிறப்பு பெற்ற மணமகன் மற்றும் மணமகள் யார் என்று தெரியுமா?
ஜானதிபதி திரௌபதி முர்முவின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பூனம் குப்தா மற்றும் மத்திய ரிசர்வ் படை (CPRF) அதிகாரி அவ்னீஷ் சிங் ஆகியோருக்கு தான் ராஷ்டிரபதி பவனில் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்ட பூனம், UPSC தேர்வு மூலம் மத்திய பாதுகாப்புப் படையில் சேர்ந்துள்ளார். 2018 ஆம் ஆண்டில், அவர் உதவித் தளபதியாக பதவி உயர்வு பெற்றார். பீகாரில் நக்சல்கள் எதிர்ப்பு நடவடிக்கையிலும் பூனம் முக்கிய பங்கு வகித்துள்ளார். 74வது குடியரசு தினத்தன்று பாதுகாப்பு படை பெண்கள் அணியையும் பூனம் வழிநடத்தினார்.
பூனமின் வருங்கால கணவர் அவ்னீஷ் சிங்கும் CRPF படையில் உதவி தளபதியாக உள்ளார். அவ்னீஷ் தற்போது ஜம்மு காஷ்மீரில் பணிபுரிகிறார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த மாதம் காதலர் தின வாரத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இந்தத் திருமணம் பிப்ரவரி 12 ஆம் தேதி சில பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. பூனம் குப்தா, ராஷ்டிரபதி பவனில் திருமணம் செய்து கொள்ள ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் அனுமதி கோரியிருந்தார்.
பூனம் குப்தாவின் நன் நடத்தை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வினால் மிகவும் ஈர்க்கப்பட்ட, ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமண கொண்டாட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்டினார். ஜனாதிபதியின் அனுமதி பெற்ற பிறகு, திருமணத்திற்கான ஏற்பாடுகள் தற்போது ஜனாதிபதி மாளிகையில் தொடங்கியுள்ளன. ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் இந்த திருமண விழாவில் இரு குடும்பங்களின் நெருங்கிய நபர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். ராஷ்டிரபதி பவனில் முதல் முறையாக ஒரு திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா அன்னை தெரசா கிரவுன் வளாகத்தில் நடைபெற உள்ளது.