ஓசியில் டீ, பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்து தகராறு செய்த மகளிர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

ஓசியில் டீ, பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்து தகராறு செய்த மகளிர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!
Published on

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் உள்ளது கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார் விஜயலட்சுமி. இன்று இவர் தனது காவல் நிலையத்தைச் சேர்ந்த ஓட்டுநர் உள்ளிட்ட நான்கு காவலர்களுடன் படப்பையில் உள்ள ஒரு கடைக்குச் சென்றிருக்கிறார். அங்கு இவர்கள் நான்கு பேரும் அந்தக் கடையில் இருந்து பிரட் ஆம்லெட், ஜூஸ், பிஸ்கெட், டீ போன்றவற்றை வாங்கி உற்சாக சாப்பிட்டு இருக்கிறார்கள்.

அதே உற்சாகத்தோடு, கடைக்காரர் சாப்பிட்ட பொருட்களுக்கு அவர்களிடம் காசு கேட்டபோது சினிமாவில் வருவதுபோல், ‘யாரிடம் காசு கேட்கிறாய்’ எனும் பாணியில் அந்தக் கடைக்காரரிடம் பணம் தர மறுத்ததோடு, வாக்குவாதத்திலும் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக வெளியானது.

இது சம்பந்தமாக அந்தக் கடையின் உரிமையாளர், மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில், தாம்பரம் காவல் ஆணையர் அமுல்ராஜ், சம்பந்தப்பட்ட மகளிர் காவலர்களிடம் விசாரணை நடத்த உத்தவிட்டார். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட நான்கு காவலர்களும் கடையில் ஓசியில் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்ததும், கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் உறுதியாகத் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, கடையில் ஓசியில் சாப்பிட்டுவிட்டு காசு தர மறுத்த கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, ஓட்டுநர் ஜெயமாலா மற்றும் அவருடன் சென்ற இரண்டு காவலர்கள் உள்ளிட்ட நான்கு பேரையும் பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமுல்ராஜ உத்தரவிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com