27 வயதான ஜிம் டாங், நியூயார்க்கில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பலரின் கனவான வேலையைத் துறந்து, ஒரு டிஜிட்டல் நாடோடியாக (digital nomad) டோக்கியோவில் தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். ஆண்டுக்கு $300,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.52 கோடி) சம்பளம் பெற்ற இவர், இந்த முடிவை எடுத்ததற்கான காரணங்களை பிசினஸ் இன்சைடர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
2021-ல் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த டாங், இந்த வேலை தன் பெற்றோரின் "அமெரிக்கக் கனவை" நிறைவேற்றும் என்றும், தனது எதிர்காலத்தைப் பாதுகாக்கும் என்றும் நம்பினார். "என் பெற்றோரை நான் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றபோது, நாங்கள் அமெரிக்கக் கனவை அடைந்துவிட்டதாக உணர்ந்தேன்." என்று அவர் குறிப்பிட்டார்.
அதிக சம்பளம், சலுகைகள் இருந்தபோதிலும், கூகுள் நிறுவனத்தின் கார்ப்பரேட் வேலை அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. "பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பது எனக்கு அர்த்தமற்றதாக உணர்ந்தேன்," என்று அவர் கூறினார். கூகுளின் விளம்பரப் பிரிவில், நிறுவனத்திற்கு அதிக லாபம் ஈட்டித் தந்தாலும், அது தனிப்பட்ட அளவில் அவருக்கு எந்த திருப்தியையும் தரவில்லை.
'பணக்காரராகி, சீக்கிரம் ஓய்வு பெறுதல்' (FIRE) என்ற இலக்குடன் அவர் தொடர்ந்து உழைத்தார். $5 மில்லியன் சேமித்து, 40 வயதில் ஓய்வு பெற வேண்டும் என நினைத்தார்.
இந்த மனச்சோர்வு ஏற்பட்டு அது அதிகரித்தது. மேலும் அவருக்கு ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட காதல் முறிவு, அவரது முடிவை மேலும் உறுதிப்படுத்தியது. வாழ்க்கை குறித்த அவரது பார்வை முழுவதுமாக மாறியது. 2025 மே மாதம் தனது வேலையில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டார்.
தற்போது அவர் ஆசியா முழுவதும் பயணித்து வருகிறார். டோக்கியோவில் தனது பயணத்தைத் தொடங்கிய டாங், ஒரு புதிய தொழில்முனைவோராகவும், டிஜிட்டல் கிரியேட்டராகவும் வாழ்ந்து வருகிறார். அவர் ஆன்லைன் தயாரிப்புகளை உருவாக்குவது, ஆலோசனை வழங்குவது, மற்றும் தனது பயண அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். கூகுளில் இருந்து கிடைத்த சேமிப்பு, அவருடைய தற்போதைய முடிவில் அவருக்கு நம்பிக்கையை அளிக்கிறது.
டாங்கின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம், அவர் "வெற்றி"யை வரையறுக்கும் விதத்தில் ஏற்பட்டுள்ளது. "நான் முன்பு வெற்றியை வெளி உலக அங்கீகாரம் மற்றும் பாராட்டுக்களால் மதிப்பிட்டேன். ஆனால் இப்போது, உங்கள் தினசரி வாழ்க்கையில் மனநிறைவுடன் வாழ்ந்தால் அதுவே உண்மையான வெற்றி" என்கிறார் ஜிம் டாங். அவருடைய இந்த முடிவு, பணம் மட்டுமே வாழ்க்கையல்ல, மகிழ்ச்சியும் மனநிறைவும் முக்கியம் என்ற எண்ணத்தை இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.