ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உணவு சாப்பிட்டு நாணயங்களாக பில் செலுத்திய இளைஞர்!

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உணவு சாப்பிட்டு நாணயங்களாக பில் செலுத்திய இளைஞர்!
Published on

உயர்தர உணவகத்தில் சாப்பிடச் சென்றால், அதற்கென உள்ள விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மதித்து நடக்க வேண்டும் என்பார்கள். சொகுசு ஹோட்டலுக்கு செல்பவர்கள் அதற்கு தகுந்தாற் போல் உடையணிந்திருக்க வேண்டும். அங்கு சாப்பிடும்போது ஒரு நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். அதேபோல அதுபோன்ற இடங்களுக்கு சாப்பிடச் செல்பவர்கள் பில் தொகையை ரொக்கப் பணமாகவோ அல்லது டெபிட் /கிரெடிட் கார்டு மூலமாகவோ கொடுப்பதுதான் வழக்கம். இப்போது யுபிஐ கூட வந்துவிட்டது.

ஆனால், மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஸ்டார் ஹோட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு அதற்கான கட்டணத்தை நாணயங்களாக செலுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது பெயர் சித்தேஷ் லோகரே. அவரே தனது அனுபவத்தை விடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோவை வெளியிட்டுள்ள சித்தேஷ். அதன் கீழ் “ உணவு சாப்பிட்டதற்கு கட்டணம் கொடுக்கிறீர்கள். அது டாலராகவும் இருக்கலாம், நாணயமாகவும் இருக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

அவர் அப்படி என்ன தான் செய்தார்? நேர்த்தியாக உடையணிந்து கொண்டு நேராக மும்பையில் உள்ள தாஜ்மஹல் பேலஸ் ஹோட்டலுக்குச் சென்றார். அங்குள்ள உணவகத்தில் டேபிள் எதிரே அமர்ந்து கொண்ட அவர், பீட்ஸா ஆர்டர் செய்து சாப்பிட்டார். பின்னர் பழச்சாறுகளை வரவழைத்து அருந்தினார். அவர் சாப்பிட்டதற்கான பில்லை வெயிட்டர் எடுத்துவந்து டேபிளில் வைத்தார். உடனே சித்தேஷ், தான் பையில் கொண்டுவந்திருந்த நாணயங்களை எடுத்து ஒவ்வொன்றாக எண்ணி கொடுத்தார். உணவகத்தில் சாப்பிட வந்திருந்தவர்கள் அவரது செய்கையை ஆச்சரியமாக பார்த்தனர். பாவம் வெயிட்டர். அந்த இளைஞர் கொடுத்த சில்லறை நாணயங்களை கிச்சனில் எண்ணிப்பார்த்து கேஷ்கவுன்டரில் செலுத்தினார்.

பின்னர் அவர் அந்த விடியோவில் மேலும் கூறுகையில், இது ஒருசிலருக்கு பாடமாக இருக்க வேண்டும் என்பதாலேயே இதை வெளியிடுகிறேன். நாம் நாமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் நம்மை ஏளனமாக பார்ப்பார்ப்பார்களே என்றோ, மற்றவர்கள் முன் நம்மை பகட்டானவர்களாகக் காட்டிக்கொள்ளும் வகையிலோ நாம் செயல்படக்கூடாது. சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நாம் செயல்படாமல் நாம் நாமாக இருக்க வேண்டும் என்கிறார் அவர். உண்மைதானே!

சித்தேஷின் விடியோவை சிலர் பாராட்டினாலும் வேறு சிலர் அவரை விமர்சிக்க தயங்கவில்லை. “மற்றவர்கள் முன்பு உங்களை நாகரீகமானவர்கள் போல் காட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதனால் எந்த பயனும இல்லை” என்பதையே இந்த விடியோ சுட்டிக்காட்டுகிறது என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். வாழ்க்கை முழுவதும் இதே நிலையை கடைபிடிக்க முடியுமா என்று கேட்டு மற்றொருவர் பதிவிட்டுள்ளார். மூன்றாமவர், நீங்கள், நீங்களாக இருங்கள். மற்றவர்களை காப்பியடிக்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

“சில்லறை நாணயங்களை கொடுப்பதால் உணவக ஊழியருக்கு எத்தனை கஷ்டம் பாருங்கள். மற்ற வேலைகளை விட்டுவிட்டு நாணயத்தை எண்ணுவதுதான் அவர்களுக்கு வேலையா?. அவரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

நீங்கள் உங்கள் வழியில் நடப்பதால் அது மற்றவர்களுக்கு அசெளகரியம் என்று நினைக்க வேண்டாம் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

நீங்கள் கொடுப்பது இந்திய நாட்டின் பணம் தான். சட்டப்படி செல்லுபடியாகும் நாணயங்களைத்தான் கொடுத்துள்ளீர்கள். இதில் என்ன தவறு? என்று ஒருவர் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com