திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக் கிளையில் இன்று காலை நடைபெற்ற ஒரு கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வழக்கம்போல் இன்று காலை சுமார் பத்து மணியளவில் பணியாளர்கள் ஒவ்வொருவராக வங்கிக்கு வர ஆரம்பித்தனர். வங்கி திறந்து சிறிது நேரமே ஆன நிலையில், அந்த வங்கியில் இரண்டு பெண் பணியாளர்கள், வங்கி மேளாலர் உள்ளிட்ட நான்கு பேர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது வாடிக்கையாளர் போல் வங்கியில் நுழைந்த ஒரு இளைஞர், அந்த வங்கியின் பரிவர்த்தனை விஷயங்கள் குறித்து ஒரு பணியாளரிடம் கேட்டுள்ளார்.
அப்போது அந்த இளைஞர் திடீரென தனது கையில் வைத்திருந்த ஒரு ஸ்ப்ரேவை அந்தப் பணியாளரின் முகத்தில் அடித்துள்ளார். அதனால் அந்தப் பணியாளருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு கத்தியுள்ளார். இதனைக் கண்டு அருகில் இருந்த மற்ற இருவர் நெருங்கி வர, அவர்கள் மீதும் அந்த இளைஞர் அந்த ஸ்ப்ரேவை அடித்துள்ளார். கண் எரிச்சலில் தவித்து அலறிய அந்த மூவரையும் தான் கொண்டு வந்திருந்த டேப் மூலம் அவர்களின் கைகளைக் கட்டியுள்ளார். வங்கியில் இருந்த மற்ற ஒரு பணியாளர் உடனே சுதாரித்துக்கொண்டு வெளியே ஓடி வந்து, ‘கொள்ளையன்… கொள்ளையன்…’ என்று சத்தம் போட, அருகிலிருந்த ஆட்டோ ஸ்டேண்ட் ஓட்டுநர்கள் சிலர் வங்கிக்குள் நுழைந்து அந்தக் கொள்ளையனை மடக்கிப் பிடித்துள்ளனர்.
பின்னர் வங்கி ஊழியர்கள் திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் அந்த இளைஞரைப் பிடித்துக்கொண்டு காவல் நிலையம் சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து அந்த இளைஞரை விசாரித்தபோது, கொள்ளையடிக்கச் சென்ற அந்த நபர் திண்டுக்கல் நெட்டுத் தெருவைச் சேர்ந்த 23 வயதாகும் கலில் ரகுமான் என்பது தெரிய வந்தது. இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு ஏதும் போகாமல் இருந்திருக்கிறார்.
விசாரணையின்போது அவர், “கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்குப் போகாமல் இருக்கிறேன். எனது செலவுக்கு வீட்டில்தான் பணம் கொடுத்தார்கள். நான் வேலைக்குப் போகாததால் தற்போது எனது வீட்டிலும் பணம் கொடுப்பதில்லை. அந்த விரக்தியில் சமீபத்தில் வெளிவந்திருக்கும், ‘துணிவு’ படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தில் வரும் கொள்ளை சம்பவங்களைப் பார்த்து நானும் கொள்ளையடிக்க முடிவு செய்தேன். இந்தப் படம் தவிர, இன்னும் சில அதுபோன்ற படங்களையும் பார்த்தேன். அதன்படி வங்கி ஊழியர்களை செயலிழக்க வைக்க ஸ்பிரே, கட்டிப்போட டேப் மற்றும் அவர்களைத் தாக்க இரும்பு கம்பி போன்றவற்றை உடன் எடுத்துக்கொண்டு சென்றேன். இப்போது மாட்டிக்கொண்டேன்” என்று அவர் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கலில் ரகுமானிடமிருந்து கொள்ளையடிக்க அவர் கொண்டுவந்திருந்த ஸ்ப்ரே, இரும்பு கம்பி, டேப் ஆகிய பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேற்கொண்டு, போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.