கடந்த சில தினங்களாகவே வாட்ஸ் அப் பயன்படுத்தும் இந்திய பயனர்களை குறிவைத்து, இன்டர்நேஷனல் நம்பர்களிலிருந்து மெசேஜ் அனுப்பி பண மோசடியில் ஈடுபட்டு வருகிறது ஒரு கும்பல். இது மூலமாக பேக் மெசேஜ் பெற்ற ஒரு பெண் அந்த மோசடி கும்பலுக்கே விபூதி அடித்துள்ளார்.
நாளுக்கு நாள் சைபர் குற்ற சம்பவங்கள் உலகில் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக தொழில்நுட்ப வளர்ச்சியைக் கூறினாலும், மக்களிடம் சரியான விழிப்புணர்வின்மையும் இந்த குற்ற சம்பவங்களுக்கு காரணமாக இருந்து வருகிறது. சமூக ஊடகங்கள் வாயிலாகவே அதிகப்படியான பண மோசடி சம்பவங்கள் நடக்கிறது. அதன் வரிசையில் சமீப காலமாக வாட்ஸ் அப் மூலமாக சில குற்ற செயல்கள் நடந்து வருகிறது.
இத்தகைய சைபர் குற்றத்தில் ஈடுபடும் கும்பலானது, போலியான வெளிநாட்டு வாட்ஸ்அப் நம்பரிலிருந்து ஒருவருக்கு அழைப்புகள் விடுத்தோ, மெசேஜ் செய்தோ, பார்ட் டைம் வேலை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கிறார்கள். Youtube வீடியோ பார்த்தால் போதும், சில பிடிஎப் பைல்களைப் பார்த்து அதை டைப் செய்து கொடுத்தால் போதும் என, எளிமையான வேலையைக் கூறி அதற்கு சம்பளமாக 500, 1000 தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறுகிறார்கள்.
இதை நம்பி பலர் தங்களின் தனிப்பட்ட விவரங்களையும், வங்கிக் கணக்கு தகவல்களையும் அளித்துவிடுவதால், அதைப் பயன்படுத்தி பணத்தையும் பறித்து விடுகின்றனர் இந்த கும்பல். இதேபோல பலருடைய பணம் திருடப்பட்டுள்ளது. இந்த கும்பலானது இந்திய தொலைபேசி எண்களைப் பயன்படுத்தாமல், வெளிநாட்டு எண்களை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தான் பெங்களூருவில் சால்ட் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனராக இருக்கும் உதித்தா பால் என்பவருக்கு, இன்டர்நேஷனல் நம்பரிலிருந்து வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது. அதில் அவர்கள் தங்களிடம் பார்ட் டைம் வேலை இருப்பதாகவும், யூட்யூப் வீடியோவைப் பார்த்து லைக் போட்டால் போதும் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதைப் பார்த்த உதித்தாவும் "சரி இதை நான் செய்கிறேன்" என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
பின்னர் உதித்தா பால் அந்த மோசடி கும்பலுக்கு ஒரு காணொளியை அனுப்பியுள்ளார். அதை பார்த்ததும் அந்த எண்ணிலிருந்து இவருக்கு எந்த மெசேஜும் திரும்ப வரவில்லை. அவர் அனுப்பிய காணொளியானது "ஆன்லைன் மோசடி செய்ய முயற்சித்து மாட்டிக்கொண்ட முட்டாள்" என்ற தலைப்பில் பதிவிடப்பட்டிருந்த வீடியோவாகும்.
இப்படி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட கும்பலிடமிருந்து தப்பித்ததோடு மட்டும் இல்லாமல், அந்த கும்பலையே கிண்டல் செய்தும் இருக்கிறார் இந்தப் பெண்மணி. எனவே மக்கள் யாரும் பார்ட் டைம் வேலை இருப்பதாகக் கூறி வரும் எந்த விளம்பரங்களையும் வாட்ஸ் அப் மெசேஜ்களையும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.