
ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் தகவல்களை சரியான நேரத்தில் புதுப்பிப்பது மிகவும் அவசியம். 5 வயது மற்றும் 15 வயது குழந்தைகளுக்கு இந்த அப்டேட் கட்டாயம்.கடைசி நிமிட அப்டேட் செய்யும்போது ஏற்படும் பதற்றத்தைத் தவிர்க்க, இப்போதே இந்த அப்டேட்டை முடிக்க வேண்டும் என்று UIDAI கேட்டுக்கொண்டுள்ளது. ஆதார் கார்டில் மாணவர்கள் பயோமெட்ரிக் அப்டேட் செய்யாவிட்டால் அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும். NEET, JEE, CUET போன்ற போட்டித் தேர்வுகளிலும், பல்கலைக்கழகத் தேர்வுகளிலும் பதிவு செய்ய முடியாது. எனவே, ஆதார் கார்டில் பயோமெட்ரிக் அப்டேட்டை சரியான நேரத்தில் முடிப்பது அவசியம்.
இந்நிலையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் முகாம்கள் அமைத்து குழந்தைகளுக்கு நிலுவையில் உள்ள பயோமெட்ரிக் அப்டேட்களை முடிக்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அஞ்சலகப் பணியாளர்கள் பள்ளிகளிலேயே சிறப்பு முகாம்களை அமைத்து, மாணவர்களுக்கான பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கவோ அல்லது வெளியூர்களுக்குச் செல்லவோ தேவையில்லை. அஞ்சல் குறியீட்டு எண் அடிப்படையில் பள்ளிகள் வகைப்படுத்தப்பட்டு, இந்தப் பணிகள் திறம்பட நடைபெற்று வருகிறது. இந்த ஆதார் புதுப்பித்தல் பணி, ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்திற்குள் இரண்டு கட்டங்களாக முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்திய தனித்துவ அடையாளம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் இந்த கூட்டு முயற்சி, குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, உங்கள் குழந்தையின் ஆதார் கார்டில் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய வேண்டியிருந்தால், உடனடியாக உங்கள் பள்ளியை அணுகலாம். பள்ளியில் நடைபெறும் முகாம்களில் உங்கள் குழந்தையின் பயோமெட்ரிக் அப்டேட்டை செய்து முடிக்கலாம். இதன் மூலம் உங்கள் குழந்தை அரசு திட்டங்களின் பலன்களைப் பெற முடியும். மேலும், போட்டித் தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகளில் பதிவு செய்யவும் முடியும்.