'பி.எம்.கிஸான் பயனாளிகள், 13வது தவணைத் தொகையை பெற, ஆதார் எண்ணை உறுதி செய்ய வேண்டும்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
'பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி' திட்டத்தின் கீழ், சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு, நான்கு மாதங்களுக்கு ஒரு முறைஉதவித் தொகையாக 2,000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு, 6,000 ரூபாய், அவர்களின் வங்கி கணக்கில் நேரடி யாக, மத்திய அரசால் வரவு வைக்கப்படுகிறது.
நடப்பாண்டு டிசம்பர் முதல் மார்ச் வரை உள்ள காலத்திற்கான, 13வது தவணைத் தொகை வழங்கப்பட உள்ளது. இத்தொகை, பி.எம்.கிஸான் இணையதளத்தில், தங்கள் ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என, மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
விவசாயிகள் பொது சேவை மையம் வழியாக அல்லது மொபைல் போன் வழியாக, தங்கள் ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.