

ஆன்மீக சுற்றுலா பயணிகளுக்காக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து ஒரு நாள் "ஆடி அம்மன் கோயில் சுற்றுலா திட்டத்தை" தொடங்கி உள்ளனர்.
ஆடி மாதம் வந்தாலே போதும், மக்கள் கோயில் கோயிலாக செல்ல ஆரம்பித்து விடுவார்கள். அப்படி கோயில்களுக்கு செல்வோர் எந்த கோயிலுக்கு செல்லவேண்டும் என தெரியாமல் மனதிற்கு தோன்றும் கோயிலுக்கு சென்றுவிட்டு வருவார்கள். குறிப்பாக பெண்கள் ஆடி மாதம் வந்தாலே அம்மன் கோயில்களுக்கு படையெடுப்பர்கள். அப்படி ஆடி மாதத்தில் வெகு தொலைவில் உள்ள கோயில்களுக்கு செல்ல விரும்பும் நகராக நீங்கள்? ஆனால் வீட்டில் உள்ளவர்கள் உங்களுடன் வரவில்லையா? எப்படி போவதென்று தெரியவில்லையா? இப்படி பல கேள்விகளால் சூழப்பட்டிருக்கும் உங்களுக்காக தமிழக அரசு ஒரு அதிரடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தனி நபருக்கு மட்டுமல்ல குடும்பத்துடன் தமிழகத்தில் உள்ள பல கோயில்களை சுற்றி பார்க்க ஆசைப்படுபவர்களுக்கும் பொருந்தும். இதன் முதற்கட்டமாக சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் திருக்கோயில்களுக்கான ஆன்மிகச் சுற்றுலாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கேகர்பாபு தொடங்கி வைத்தார்.
ஆடி மாத அம்மன் கோயில்கள் சுற்றுலா திட்டத்தின் கீழ், சென்னை, மதுரை, திருச்சி தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள அம்மன் திருக்கோயில்களுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் பயணிகள் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாவில் பங்கேற்ற விரும்புவோர் www.ttdconline.com என்ற இணையத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 63806 99288, 91769 95841 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.