இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாத அம்மன் கோயில் ஆன்மிகச் சுற்றுலா!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாத அம்மன் கோயில் ஆன்மிகச் சுற்றுலா!
Published on

டி மாதம் பிறந்துவிட்டாலே, பக்தர்களின் ஆன்மிகச் சுற்றுலாக்களுக்கு குறைவிருக்காது. தனி ஒரு குடும்பமாக இதுபோன்ற சுற்றுலாக்களுக்குச் சென்றால் அவர்களுக்கு உண்டாகும் அதிகப்படியான செலவினைக் குறைக்கும் விதமாக, தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக, சுற்றுலாத்துறையின் ஒருங்கிணைப்புடன் தமிழ்நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்களை ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அதன்படி, சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களைத் தலைமையிடமாகக் கொண்டு சுற்றுலாத்துறை ஒருங்ணைப்புடன் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது. சென்னை மாவட்டத்தின் பிரபல கோயில்களான அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில், ராயபுரம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடையம்மன் திருக்கோயில் உள்ளிட்ட ஒன்பது கோயில்களுக்கு ஒரு பயணத் திட்டமும், சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் திருக்கோயில், மயிலை அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில், மாங்காடு அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட பத்து திருக்கோயில்களுக்கு இரண்டாவதாக ஒரு பயணத் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

அதேபோல், திருச்சி மாவட்டத்தின் உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளிட்ட எட்டு திருக்கோயில்களுக்கு ஒரு பயணத் திட்டமும், தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில், திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில், தஞ்சை அருள்மிகு பெரியநாயகி உடனுறை பிரகதீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட பத்து கோயில்களுக்கு ஒரு பயணத் திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இதைப்போலவே, மதுரை மாவட்டத்தில் இருக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில், மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், அரியாக்குறிச்சி அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில் உள்ளிட ஆறு கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த ஆன்மிகச் சுற்றுலா பக்தர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட இருக்கிறது. மேலும், இந்த ஆன்மிக சுற்றுலாவில் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு திருக்கோயில் பிரசாதம், திருக்கோயில் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடும் வழங்கப்படும்.

பக்தர்கள் இந்த ஆன்மிகச் சுற்றுலா தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், இது தொடர்பாக www.ttdconline.com என்ற சுற்றுலாத்துறை இணையதளத்திலும், 044 – 25333333, 25333444 என்ற தொலைபேசி எண்களிலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4253 1111 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். ஆன்மிக அன்பர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு அம்மன் அருள் பெற வேண்டுமாய் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com