ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு!

ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு!

நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானதாகும் என்றும் கூறியுள்ளது. மேலும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது மத்தியில் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை ஆம் ஆத்மி எதிர்க்கிறது. இது நாடாளுமன்ற ஜனநாயகம், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைவந்தால், தொங்கு சட்டப்பேரவை நிலையை சமாளிக்க முடியாது. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வெளிப்படையாக பேரம்பேசப் படுவார்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலாளர் பங்கஜ் குப்தா தேர்தல் குழு செயலர் நிதின் சந்திரவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

ஜனவரி 18 ஆம் தேதியிட்ட அந்த கடிதத்தில், குறுகிய நிதி ஆதாயங்களுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தின் கோட்பாடுகளை தியாகம் செய்யமுடியாது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பலகட்சி நடைமுறையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பிடத்தக்க விதிவிலக்குகள் இருந்தாலும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறும் போது பெரும்பாலான  வாக்காளர்கள் ஒரு கட்சிக்கே வாக்களிக்க முற்படுவார்கள். இது தேசிய கட்சிகளுக்கு ஆதாயமாக இருக்கும். பிராந்திய கட்சிகளில் ஆதிக்கம் உள்ள கட்சிகள் பலன்பெறும்.

ஆனால், சிறிய கட்சிகள் வெகுவாக பாதிக்கப்படும் என்று அந்த கடிதத்தில் குப்தா குறிப்பிட்டுள்ளார். முன்னதாக காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல் குழு செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜனநாயகத்துக்கு விரோதமான இந்த யோசனையை கைவிட வேண்டும் என்றும் இதற்காக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவை கலைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. கடந்த ஆண்டு செப். 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை எந்த காரணமும் கூறாமல் மத்திய அரசு கூட்டியதை அடுத்து இது தொடர்பான விவாதம் தொடங்கியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com