தமிழ்நாட்டின் முன்னணி பால் விற்பனை நிறுவனமாக செயல்பட்டு வரும் ஆவின், ஐந்து லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் விலையை உயர்த்தி உள்ளது. ஆவின், தமிழ்நாடு அரசின் பால்வளத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆவின் நிறுவனம் பால் மட்டும் விற்பனை செய்யாமல், பல்வேறு வகையான பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ் கிரீம்கள் வகைகளையும் விற்பனை செய்து வருகிறது. இப்படி, ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு 36 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து, அதில் 30 லட்சம் லிட்டர் பாலை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், ஆவின் நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ஆவின் நிறுவனத்தின் ஐந்து லிட்டர் அளவு கொண்ட பச்சை நிற பால் பாக்கெட் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த பால் பாக்கெட்டின் விலை தற்போது 220 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பொதுமக்கள் வாங்கும் அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் பால் பாக்கெட்டின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், இதனால் இல்லத்தரசிகள் எந்த பாதிப்புக்கும் உள்ளாக மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ஐந்து லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் பெருமளவில் டீக்கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே காய்கறி, மளிகை பொருட்களின் விலை உயர்வால் சிக்கித் தவிக்கும் உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் தற்போது பால் விலை உயர்வின் காரணமாகவும் பாதிப்பை சந்திக்க உள்ளன. இதனால் டீக்கடைகள் மற்றும் உணவகங்களில் விலையேற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பாதாம் மிக்ஸ் மற்றும் பன்னீர் போன்ற பொருட்களின் விலை முன்பே உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.