ஆவினின் ஊதா நிற பால் - மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்குமா?

ஆவினின் ஊதா நிற பால் - மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்குமா?
Published on

தமிழக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சர் மாற்றப்பட்டு புதிய அமைச்சர் பதவியேற்கும் நிலையில் ஆவின் நிறுவனம் புதிய பால் பாக்கெட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. விட்டமின் ஏ, டியை உள்ளடக்கிய புதிய பால் பாக்கெட் சென்னை வாசிகளுக்கு நேற்று முதல் வழங்கப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட ப்ரீமியம் பசும்பால் என்னும் பெயரில் அறிமுகமாகும் பால் பாக்கெட், வயலெட் கலரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம் பால் பண்ணைகள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பசும்பால் என்று அறிமுகப்படுத்தப்படுவதுதான் மக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியிருக்கிறது.

சென்னையைப் பொறுத்தவரை பசும்பால்தான் கிடைத்து வருகிறது. தமிழ்நாட்டில ஈரோடு பகுதியில் மட்டுமே எருமைப்பால் கிடைக்கிறது. ஆனால், உள்ளூர் தேவைகளுக்கே அது போதுமானதாக இருக்கிறது. உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு விநியோகிக்க பசும்பால்தான் பொருத்தமாக இருப்பதாக குறிப்பிடுகிறார்கள்.

அரை லிட்டர் பாக்கெட், 22 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. பசும்பால் என்று வகைப்படுத்தப்படும் பாக்கெட்டில் 3.5 சதவீத கொழுப்பு, 8.5 சதவீதம் எஸ்.என்.எப் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகவே விட்டமின் குறைபாடு உள்ளவர்களை குறிவைத்து தனியாக ஒரு பால் பாக்கெட் கொண்டு வரவேண்டும் என்று நீண்ட நாட்களாகவே திட்டமிடப்பட்டிருக்கிறது.

இது முதல் முயற்சிதான். இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தவரை இன்னும் விதவிதமான விட்டமின் வகைகளுடன் பதப்படுத்தப்பட்ட பால் வெளியாக வாய்ப்பிருப்பதாக ஆவின் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் ஆவின் நிறுவனத்தின் புதிய பால் பாக்கெட்டை வாங்குவதற்கு பால் விற்பனையாளர்கள் தயங்குகிறார்கள்.

இது பச்சை பால் பாக்கெட்டை விட ஒரு சதவீதம் கொழுப்பு குறைவாக இருந்தாலும் அதே விலையில் விற்கப்படுகிறது. ஆகவே, வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய பால் பாக்கெட்டிற்கு வரவேற்பு இருக்காது என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com